பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள்
பெண்ணெழுத்து களமும் அரசியலும், ச. விசயலட்சுமி, பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை 18, விலை 70 ரூ.
தொண்ணூறுகளின் இறுதியில் பெண் கவிதை எழுத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. சொல்லும் பொருளும் புதிதாக, பல்வேறு வகைமைகளில் பெண் கவிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள். ஆனால் பெண்களின் கவிமொழியை முழுவதும் ஆராயும் விமர்சன நூல்கள் அதிகம் உருவாகாதது பெரும் குறையே. இச்சூழ்நிலையில் சமகாலப் பெண் கவிஞர்கள் குறித்து குட்டி ரேவதி எழுதியதைத் தொடர்ந்து வரும் புத்தகம் பெண்ணெழுத்து முக்கியமான வரவாகும். கவிஞர் ச. விசயலட்சுமி தனக்கேயுரிய இடதுசாரிக் கண்ணோட்டத்துடன் மாலதி மைத்ரி, சுகந்தி சுப்பிரமணியன் முதல் ஃபஹீமா ஜஹான் வரையிலான கவிஞர்களைப் பற்றித் தீர்க்கமாக எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது.
—
குட்டி புக் கலெக் ஷன்ஸ், கல்கி பதிப்பகம், 47 என்.பி., ஜவஹர்லால் நேரு சாலை, சென்னை – 32, விலை 100 ரூ.
குடும்ப ஆரோக்கியத்திற்கான குறிப்புகள், குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுகள், கண் பாதுகாப்பு, சருமப் பராமரிப்பு, ஆகியவற்றுக்கு தனித்தனியாக 12 ரூபாய் விலையில் கல்கி வெளியிட்டிருக்கும் சிறு வெளியீடுகளின் தரம் மனதை ஈர்க்கிறது. மங்கையர் மலர் சார்பாக இவை வெளியிடப்பட்டுள்ளன. வீட்டில் பராமரிக்க வேண்டியது அவசியம், 10 புத்தகங்களையும் சேர்த்து வாங்கினால் 100 ரூபாய்.
—
பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள், தமிழில் அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் – 629001
இந்திய அரசியலில் ஒடுக்கப்பட்டோரின் குரலும் அரசியல் சாசனத்தை உருவாக்கியவருமான பி. ஆர். அம்பேத்கர் வரலாறு பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. காந்தியும் நேருவும் படேலும் தேசியத் தலைவர்களாய் மக்களது நினைவில் பதியவைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அம்பேத்கர் இன்னமும் சாதித் தலைவர் என்ற வட்டத்துக்குள் ஒடுக்கப்பட்டிருக்கிறார். வெள்ளையர்கள் நம் நாட்டை அடிமை செய்திருந்தபோது ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த அம்பேத்கர் தீண்டாமையின் கொடுமைகளை நேரடியாகக் கண்டு வளர்ந்தவர். கொலம்பியாவுக்குச் சென்று மேல்படிப்பு படித்துத் தாயகம் மீண்டபிறகும், அவரது சாதீய அடையாளம் அவரை வேட்டையாடியது. இந்தச் சம்பவங்களின் ஊடாக அவரது போராட்டங்கள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகள், கோண்டு பழங்குடி ஓவியக் கலைஞர்களால் சித்திரமாகத் தீட்டப்பட்டு, பீமாயணமாக இப்புத்தகம் உருவாகியுள்ளது. வெறுமனே சுவாரசிய நிகழ்வு அடுக்குகளால் மட்டும் கதை சொல்லாமல், சாதி, இன்றும் அதன் அழுத்தங்கள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றோடு சேர்ந்து இந்தச் சித்திரப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் வாசகர்கள் யார் என்பதை இப்புத்தகத்தின் வடிவமைப்பைப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடியவில்லை. எளிய வாசகர்கள் மற்றம் வாசிக்கப்பழகும் குழந்தைகள் இந்தப் புத்தகத்தைச் சரளமாகப் படிக்கமுடியுமா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. அழகாக, பராமரிப்பதற்கான ஆசையைத் தூண்டும் விதத்தில் இப்புத்தகத்தை நவ்யானாவும் காலச்சுவடும் பதிப்பித்துள்ளன. நன்றி: தி சன்டே இந்தியன் 30-09-12