மகாபாரதம் மாபெரும் விவாதம்
மகாபாரதம் மாபெரும் விவாதம், பழ. கருப்பையா, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 310, விலை 250ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-93-5135-182-5.html இந்நூலாசிரியரின் பிறமொழி கலப்பில்லாத தெள்ளு தமிழும், ஆற்றொழுக்கு நடையும், புதிய சிந்தனையும் வாசகனை வசப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. மகாபாரதம் எண்ணற்ற கதாபாத்திரங்களைக் கொண்ட கதை. ஆனாலும் எந்த ஒரு கதாபாத்திரமும் குறைவற்ற நிறைவான உயர்வு நிலையைக் கொண்டவையாக அமைக்கப்படவில்லை. கடவுள் அவதாரமாகக் கூறப்படும் கிருஷ்ண பகவானின் பாத்திரத்திலுள்ள குறைகள் கூட துரியோதனால் சுட்டிக்காட்டி விமர்சிக்கப்படுகிறது. இப்படி எல்லா கதாபாத்திரத்திலும் உயர்வு-தாழ்வு, பலம்-பலவீனம் என்று மனித வாழ்க்கையின் யதார்த்தம் வெளிப்படுத்தப்படுவதால், மகாபாரதம் ஒரு சிறப்பான படைப்பாகக் கருதப்படுகிறது. இதைத்தான் இந்நூலாசிரியர் தனது கருப்பொருளாகக் கொண்டு, சில முக்கிய கதாபத்திரங்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து இந்நூலை ஆக்கியுள்ளார். இந்த ஆய்வுக்கு அவர் வில்லிபுத்தூர் ஆழ்வார், பாரதியார், ராஜாஜி, சோ போன்றோர் எழுதிய மகாபாரதங்களையும் துணைக்குக் கையாண்டுள்ளார். இந்த நூலின் முதல் கட்டுரையிலேயே அர்ஜுனனால் வெல்லப்பட்ட பாஞ்சாலி அவனுக்கு மட்டும்தானே உரியவள்? எப்படி உடன்பிறந்த மற்ற நால்வருக்கும் உரியவளாவாள் என்று விவாதத்தை ஆரம்பித்து, அதற்கான விளக்கங்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்கிறார். இப்படி 47 கட்டுரைகள் உள்ளன. வேத வியாசனே பிறந்து வந்து படித்துப் பார்த்தால், அட இப்படியெல்லாம் கூட நான் படைத்த கதாபாத்திரங்களுக்கு வியாக்கியானம் தர முடியுமா என்று ரசித்துப் பாராட்டுவார் என்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளது இந்நூலுக்கு சாலப் பொருந்தும். -பரக்கத். நன்றி: துக்ளக், 24/12/2014.