மண்ணில் உலவிய மகான்கள்
மண்ணில் உலவிய மகான்கள், க.துரியானந்தம், எல். கே. எம். பப்ளிகேஷன்ஸ், பக்கம் 120, விலை 50 ரூ.
மகான்கள் கடவுளுக்கு மிக நெருக்கமானவர்கள். பரம்பொருளை ஆழமாகத் தியானித்தபடி இருப்பதால், அவர்களின் தெய்வீக ஆற்றல் ஒப்பற்றதாகத் திகழ்கிறது. மனித உருவில் நடமாடிய மகான்களின், திவ்ய சரிதங்களை அறிவதும் பரம சுகத்தை அளிக்கிறது. அப்படி இந்நூலில் காலணா காசை மக்களிடம் வசூல்செய்து, கோவில் திருப்பணிகள் செய்த பாடகச்சேரி சுவாமிகள், ராமநாமஜெய மகிமையை மக்கள் மனதில் பதித்த போதேந்திர சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், ரமணரையே அடையாளம் காட்டிய சேஷாத்ரி சுவாமிகள், கையை வெட்டினாலும் கலங்காத அவதாரான சதாசிவ பிரம்மேந்திரர், குழந்தைப் பருவம் முதலே அற்புதங்கள் நிகழ்த்திய தட்சிணாமூர்த்தி சுவாமிகள், ரெட்டியப்பட்டி சுவாமிகள் என, ஏழு மகான்களின் திவ்ய சரித நூலாக இந்நூல் அமைந்துள்ளது. அட்டையிலும் உள்ளேயும் இவ்வருளாளர்களின் திருவுருவப் படங்களும் இடம்பெற்றுள்ளன. மனத்துக்கு இதமளிக்கும் அருமையான நூல். – கவுதம நீலாம்பரன்
—
ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர் ஏ. இளஞ்செழியன், விகடன் பிரசுரம், சென்னை, 95 ரூ.
இலங்கையில் வாழும் சிங்கள மக்களோடு, தோளோடு தோள் கொடுத்து, சோஷலிசத்தை நோக்கி பயணமாகும் அமைப்பு இலங்கை தி.மு.க. (பக்க 122) என்று கூறும் ஆசிரியர், மலையகத் தமிழர்கள் பற்றியும், அங்கு இதுவரை ஏற்பட்ட அரசியல் பரபரப்புகள் பற்றியும் இந்த நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, அண்ணாதுரை நடத்திய, ‘காஞ்சி’ இதழில், ‘இலங்கை அரசியல் இந்திய துணைக்கண்டத்து, குறிப்பாக, தமிழகத்தின் அரசியலுக்கு அப்பாற்பட்டது. (பக்க 154)ல் தகவல் உள்ளது. அதேபோல, சென்னை மாநிலம் என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதால், இலங்கை மீது தமிழகம் படையெடுப்பதாக அர்த்தம் இல்லை என்பதும், அந்த இதழில் திருமதி பண்டாவுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு பல்வேறு தகவல்களை இந்த நூல் கொண்டிருக்கிறது. நன்றி: தினமலர் 07-10-12