முத்திரை நினைவுகள்
முத்திரை நினைவுகள், ஜே. எம். சாலி, இலக்கிய வீதி, சென்னை 101, பக்கங்கள் 144, விலை 120ரூ
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜே.எம். சாலி தனது எழுத்துலக அனுபவங்களை இந்நூலில் எழுதியுள்ளார். 1955இல் கண்ணன் சிறுவர் இதழுக்கு எழுத ஆரம்பித்த அவர், அதற்குப் பின்பு தமிழகத்தின் பிரபல இதழ்கள் எல்லாவற்றிலும் எழுதிவிட்டார் என்பது நம்மை வியக்க வைக்கிறது. பிரபல பத்திகையாளர்களான சாவி, இதயம் பேசுகிறது, மணியன், கல்கி ராஜேந்திரன் உட்பட பல பத்திகையாளர்களுடன் நூலாசிரியருக்கு இருந்த தொடர்புகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனந்தவிகடன், சிங்கப்பூர் தமிழ் முரசு, மயன் போன்ற இதழ்களில் அவர் பணிபுரிந்த அனுபவம் விவரிக்கப்பட்டுள்ளது. டபுள்யூ, ஆர். ஸ்வர்ணலதா என்ற பெயரில் மர்மக் கதையும் எழுதியிருக்கிறார். குழந்தை எழுத்தாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர், பத்திரிகையாளர் என்று எழுத்துலகின் பல்வேறு தளங்களிலும் சிறப்பாக பணிபுரிந்த அவருடைய அனுபவங்கள் மிகச் சுவையாக கூறப்பட்டுள்ளன. அற்புதமாக எழுதிவிட்டேன் என்று நான் நினைத்தால் அது அகந்தை, அப்படி நான் சொன்னால் அது ஆணவம் என்று நூலாசிரியர் தன்னடக்கத்துடன் கூறியிருப்பது மனதைத் தொடுகிறது,
—-
எனது பார்வையில் பாவேந்தர் (பெ.சு. மணியின் ஆய்வுரையுடன்), ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக்கங்கள் 216, விலை 100ரூ
திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசனைப் பற்றி தேசிய ஒருமைபாட்டை வலியுறுத்திய தமிழ் உணர்வாளரான ம.பொ.சி. எழுதிய நூல். பாரதியாரையும், பாரதிதாசனையும் தனக்குள்ள தமிழ்ப்பற்றின் காரணமாக சமநிலையில் வைத்தே காண்பதாக நூலின் முன்னுரையில் ஆசிரியர் கூறுகிறார். பாரதிதாசன் ஆரம்ப காலத்தில் காந்தியவாதியாக இருந்து தேசப் பக்திப் பாடல்களைப் பாடியது. பாரதியாரின் பக்தராக அவர் விளங்கியது. அவருடைய ஆங்கில ஆதிக்க எதிர்ப்புக் குணம் என பாராதிதாசனின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக விளக்கும் நூல். ம.பொ.சி.யையும், பாரதிதாசனையும் புரிந்து கொள்வதற்கும் அவர்கள் இருவரும் வெவ்வேறு அரசியல் பார்வையைக் கொண்டவர்களாக இருந்தபோதிலும் தமிழ்ப் பற்று என்ற புள்ளியில் அவர்கள் இருவரும் ஒன்றுபடுகிறார்கள் என்று கூறும் பெ.சு.மணியின் ஆய்வுரை நூலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
—-
முருகன் வணக்கத்தின் மறுபக்கம், சிகரம் ச. செந்தில்நாதன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக்கங்கள் 136, விலை 80ரூ, To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-198-9.html
மனித குல வரலாற்றில் ஒரு கட்டத்தில் வேட்டையாடி வாழும் சமூகம் இருந்தது. தமிழகத்தில் அந்தக் காலக்கட்டத்தில் தோன்றிய கடவுள்தான் முருகன் என்று கூறும் நூல். முருகனுக்குத் தந்தை சிவன் என்பதும், தாய் பார்வதி என்பதும் வள்ளியைக் களவு மணம் செய்ததும், கற்பு மண மனைவியாகத் தெய்வானையை ஏற்றுக் கொண்டதும் பிற்காலத்தில் நிகழ்ந்தவை என்கிறார் நூலாசிரியர். சமூக வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களில் முருகன் வழிபாடு எவ்வாறெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதை பல்வேறு இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் நூல் விளக்குகிறது. வழிபாடு தொடர்பான பல்வேறு வழக்குகளைப் பற்றியும் தீர்ப்புகளைப் பற்றியும் சொல்லும் கட்டுரைகளும் அடங்கியுள்ளன. நன்றி; தினமணி, 27 பிப்ரவரி 2012.