வீணாதி வீணன்

வீணாதி வீணன், நா. வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

நா. வானமாமலை எழுதி நியூ செஞ்சரி புக் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்ட வீணாதி வீணன் கதை நூலை படித்தேன். கதைப் பாடல் நூல் இது. தென்பாண்டி சீமையை ஆண்ட, ஐவர் ராசாக்களில் ஒருவரான, குலசேகரனின் கதையின், கிளைக் கதை. வள்ளியூரிலிருந்து, மதுரைக்கு இடம்பெயர்கிறார் குலசேகரன். அப்போது உறவுகளால் ஏமாற்றப்பட்டு உணவுக்கு வழியில்லாத ஒருவன் வள்ளியூர் வருகிறான். பசிக்கு பிச்சை எடுக்கிறான். உணவு கிடைக்கவில்லை. தொழில் செய்ய, விறகு வெட்டுகிறான். அரசின் வரிவிதிப்பு, தொழிலை தடுக்கிறது.வெட்டியாகத் திரிகிறான். இவனை வீணாதி வீணன் என ஊரார் அழைக்கின்றனர். பசியில் ஒருநாள் மயங்கி விழுகிறான். அந்த ஊரைச் சேர்ந்த பெண், அவனை காப்பாற்றி, மகனைப்போல பாவிக்கிறாள். உணவு, புதிய உடை, காதில் கடுக்கன் என, உலாவுகிறான். அவனைப் பார்த்து மக்கள் மதிக்கின்றனர். நல்ல உடை அணிந்தால் மதிக்கும் மக்கள், அதிகாரம் வந்தால், எவ்வளவு மதிப்பர் என நினைக்கிறான். குண்டர்களைக் கொண்டு வரி வசூலித்து அதிகாரத்தை கையில் எடுக்கிறான். புல் வெட்டவும், குடிநீர் எடுக்கவும் வரி போடுகிறான். வீணாதி வீணனின் வாழ்க்கை இப்படி செல்கையில், வள்ளியூர் நிலவரத்தை அறிய மாறு வேடத்தில் வருகிறான் குலசேகரன். கணவனின் பிணத்தை வீட்டுக்குள் வைத்துக்கொண்டு பெண் ஒருத்தி அலறிக் கொண்டிருக்கிறாள். அவளிடம் குலசேகரன் விசாரிக்கும்போது, இந்த ஊரில் பிணத்தை எரிக்கவும், புதைக்கவும் வீணாதி வீணன் வரி கேட்கிறான். காசில்லாமல், உடலை அடக்கம் செய்ய முடியவில்லை என்கிறாள். அதிர்ந்துபோன குலசேகரன், வீணாதி வீணனை விசாரிக்கிறான். நான் பசியால் வாடியபோது ஊர் என்னை விரட்டியது. அதிகாரத்தை கையில் எடுத்தபோது பணிந்தது. எதிரியின் கைக்கூலி ஆகாமல், இந்த நாட்டில் தானே இருக்கிறேன் என நியாயம் கற்பிக்கிறான் வீணாதி வீணன். இதையேற்ற குலசேகரன், அவனை மந்திரி ஆக்குகிறான். இந்த கதை, உண்மை சம்பவங்களின் ஆய்வாக, நூல் ஆசிரியர் எழுதி உள்ளார். பண்டைய ஆட்சியின் சமூக அவலங்களை நூல் சித்தரிக்கிறது. – விஜய் பாஸ்கர். நன்றி: தினமலர், 21/6/2015.

Leave a Reply

Your email address will not be published.