வெற்றி வெளிச்சம்

வெற்றி வெளிச்சம், இயகோகா சுப்பிரமணியம், விகடன் பிரசுரம், பக். 176, விலை 95ரூ.

25 தலைப்புகளில், வெற்றியின் வழிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த நூல். தனது கட்டுப்பாடும், பிறருக்குக் கொடுக்கும் மதிப்பும், மிகுதியான உழைப்புமே வெற்றி எனும் வீட்டிற்கு அழைத்து செல்பவை என்பதை எளிய தமிழில் எடுத்துக்கூறும் இந்த நூல், அனுபவத்தின் வெளிப்பாடு. எதையும் எடுத்துக்காட்டுடன் தெரிவிக்கும்போது எளிமையான புரிதல் என்பது இயல்பாக அமைகிறது என்பதை, இந்த நூலைப் படிப்பவர்கள் எளிதில் உணர முடியும். பண்பும், நாடு சார்ந்த நெறிமுறைகளும், அனுபவசாலிகளின் ஆக்கப்பூர்மான அறிவுரைகளையும், நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்ற மனப்போக்குமே, நிரந்தரமான வெற்றிக்கும் நீண்ட கால நிம்மதிக்கும் வழி வகுக்கும். -முகிலை இராச பாண்டியன். நன்றி: தினமலர், 30/11/2014.  

—-

மௌனப் பள்ளத்தாக்கினூடே ஆதி கைலாச யாத்திரை, இரா. ஆனந்த குமார், நர்மதா பதிப்பகம், பக். 200, விலை 90ரூ.

மனமிசைந்த ஒப்புதல் என்ற தலைப்பில் துவங்கி மீண்டும் தார்ச்சுலா என்ற தலைப்போடு, புத்தகம் 27 அத்தியாயங்களோடு நிறைவடைகிறது. உலகின் புனித நீராடும் புண்ணியத் துறைகளில் மிகச் சிறந்தது ஆதி கைலாசம். அபாயங்கள் நிறைந்த பகுதி டில்லியிலிருந்து, 600கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டிய நிலை. தற்போது பிரபலமாக அனைவராலும் மேற்கொள்ளப்படும் கைலாச யாத்திரையை விட, ஆதி கைலாச யாத்திரை அபாயகரமானது. புதுடில்லியிலிருந்து புறப்பட்டு, ஆதி கைலாசத்தில் உள்ள பார்வதி ஏரி வரை பயணித்த தன் பயண அனுபவங்களை, ஒரு நாவல் போல், மிக அழகாக, துள்ளுதமிழ் நடையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். படிக்க படிக்க சுவாரசியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படித்து முடித்த பின், ஆதி கைலாசத்திற்கு சென்று வர வேண்டும் என்ற நினைப்பை தவிர்க்க முடியாது. -குமரய்யா. நன்றி: தினமலர், 30/11/2014.

Leave a Reply

Your email address will not be published.