டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ.

ஜேசி குமரப்பா: ஆளுமையும் கருத்துகளும்

தஞ்சையில் பிறந்து இங்கிலாந்தில் படித்து தணிக்கையாளர் ஆகி, மும்பையில் தொழில் செய்த இளைஞர் அவர். பின்னர் அமெரிக்கா சென்று மேற்படிப்பு முடித்து மும்பை திரும்பியிருந்தார்.

மேற்கத்திய பாணியில் நடை உடை பாணிகள் கொண்டவர். பொருளாதாரம் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதை நூலாக வெளியிட காந்தியை அணுகுமாறு சொன்னார்கள். காந்தியை சந்திக்கப்போனபோது காத்திருக்க வேண்டியிருந்தது. பார்க்காமல் கட்டுரையை மட்டும் அளித்துவிட்டுத் திரும்பிவிட்டார்.

கட்டுரைப் பிரதியைப் பார்த்த காந்தியாருக்கு அந்த இளைஞரைப் பார்க்கவேண்டுமெனத் தோன்றியது. வரச்சொன்னார். ஆசிரமத்தில் விருந்தினர் அறையில் தங்கியிருந்த இளைஞர் காலார நடந்தார். வழியில் ஓரிடத்தில் ஒரு கிழவர் ராட்டையில் நூல் நூற்றதை வேடிக்கை பார்த்தார்.

அந்த கிழவர் திரும்பி, இந்த மேலை நாட்டு ஆடையில் இருந்த இளைஞரை, ‘நீங்கள்தான் குமரப்பாவா?’ என்றார். அவர்தான் காந்தி என்றுணர்ந்த ஜெசி குமரப்பா என்கிற அந்த இளைஞர் மண் தரையில் அப்படியே அமர்ந்தார். இப்படித்தான் காந்திக்கும் குமரப்பாவுக்குமான உறவு ஆரம்பமானது. காந்தியப் பொருளியல் அறிஞர் என அறியப்படும் குமரப்பாவின் வரலாறு, அவர் உருவாக்கிய கருத்துகள் ஆகியவற்றை விரிவாக ஆய்கிற நூலை எழுதி உள்ளார் டாக்டர் மா.பா.குருசாமி.

பொருளாதாரம் மட்டுமின்றி சமுதாயம், வாழ்க்கை முறை ஆகியவை பற்றியும் ஆழமான கருத்துகளை குமரப்பா தந்துள்ளார். காந்தியடிகளின் பொருளாதாரக் கொள்கைகள் என்று எதுவுமில்லை. அவருக்கு பொருளியல் என்பது வாழ்வியலின் ஒரு பகுதிதான். சத்தியம், அகிம்சை என இரு வாழ்க்கைக் கோட்பாடுகள்தான் காந்தியடிகளின் பொருளாதார சமுதாய அரசியல் மற்றும் எல்லா கருத்துகளிலும் ஆளுமை செலுத்துகின்றன. இந்த சோதனைக் கற்களில் நிறைவாக வராத எதையும் காந்தியம் என்று சொல்லமுடியாது” என்கிறார் குமரப்பா.

காந்தியப் பொருளியலும் உருவமும் உள்ளடக்கமும் கொடுத்த இவரைதமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்த நூலின் நோக்கம் என்கிறார் நூலாசிரியர். எளிமையான மொழியில் வந்திருக்கும் நல்ல தொகுப்பு இது.

நன்றி: அந்திமழை, 2016.

Leave a Reply

Your email address will not be published.