ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1
ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1, நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 208, விலை 110ரூ.
கபிலரின் வாழ்வியல் சிந்தனைகள், குறுந்தொகையில் உவமை நயம், கலித்தொகையில் நோக்கு, நற்றிணை நவிலும் கற்பு நெறி, சங்க இலக்கியத்தில் குந்தை, ஊடல் தணிக்கும் வாயிலாக, ஈத்துவக்கும் பெருஞ்சித்திரனார் உள்பட சங்க இலக்கியம் தொடர்பான 16 கட்டுரைகளும், திருக்குறள் உள்பட அற நூல்கள் தொடர்பான 3 கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. ஒக்கூர் மாசாத்தியாரின் தனித்திறன் கட்டுரை தமிழ்ப் பெண் கவியின் கற்பனை வளம் உவமை நயம், தாய்மைப் பண்பு போன்றவற்றை அழகாக விளக்குகிறது. இதேபோல அகநானூற்றுப் பாடல்களில் பரணரின் ஆளுமை வெளிப்பாடு, பாலை பாடிய பெருங்கடுக்கோவின் பாட்டுத்திறம் கட்டுரைகள் புதிய நோக்கில் எழுதப்பட்டுள்ளன. நூலில் இறுதியாக உள்ள நாட்டுப்புறக் கதைகள் ஓர் அறிமுகம் என்ற கட்டுரை, நாட்டுப்புறக் கதைகளின் வளர்ச்சி நிலை, அவை தொடர்பான ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் குறித்து எளிமையாக எடுத்துரைக்கிறது. சங்க இலக்கியங்களை அறிந்துகொள்ள ஆர்வமுள்ளோருக்கு அவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் சில கட்டுரைகளும், தொடர் ஆய்வு மேற்கொள்வோருக்கு ஏதுவாக ஆய்வு நோக்கில் சில கட்டுரைகளும் உள்ளன. சிறந்த நூல். நன்றி: தினமணி,20/10/2013.
—-
ஏன், எங்கே, எப்படி?, கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 350ரூ.
பயனுள்ள தகவல் களஞ்சியம் இது. இந்தியா, உலக நாடுகள், பண்டைக்காலம், மன்னர்கள், திரைப்படத்துறை, விளையாட்டுகள் இப்படி பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி அரிய தகவல்கள், கேள்வி பதில் வடிவில் தரப்பட்டுள்ளன. விடைகள் நேரடியாகத் தரப்படாமல், நூதன முறையில் தரப்பட்டுள்ளன. வாண்டுமாமா எழுதியுள்ள இந்தப் புத்தகம், மாணவ மாணவிகளுக்கு மட்டுமல்ல, பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கும், மூளைக்கு வேலை கொடுக்க நினைப்பவர்களுக்கும், பொதுப் பரீட்சைகள் எழுதுவோருக்கும் மிகவும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 2013.