இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், அ.ச. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 30ரூ.

பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் என்று பல பெருமைகளைக் கொண்ட முதுபெரும் தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தனைப் பற்றி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளார் நிர்மலா மோகன். அ.ச.ஞா.வின் வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரையில் அவர் இலக்கியச் சிற்பியாக செதுக்கப்பட்டு உருமாறி வந்த வளர்ச்சிப்பாதை தொகுக்கப்பட்டுள்ளது. வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, திரு.வி.க. தெ.பொ.மீ. போன்ற தமிழ் அறிஞர்களுடனான தொடர்பும் அவரது கம்பன் புதிய பார்வை, திருவாசகசிந்தனை, பெரியபுராண ஆய்வுகளின் பின்புலமும் தெளிவாக்கப்பட்டுள்ளன. அவரது நடைச்சித்திரம், கட்டுரைத்திறன், பேராசிரியர் பணி, வானெலி – நாடகத்துறைப் பணி, தமிழ் இலக்கிய ஆய்வுகள் என்று அவரது பரிமாணங்களும் விரிவாக அலசப்பட்டுள்ளன. அ.ச.ஞா.பற்றிய நூல்களில் குறிப்பிடத்தக்க பெருமை பெறும் நூல். நன்றி: குமுதம், 20/4/2015.  

—-

திருக்குறளில் பெண்ணியச் சிந்தனைகள், முனைவர் கோ. ப. செல்லம்மாள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

உலகத்துக்கு தமிழ் மண் தந்த பெருங்கொடை, திருக்குறள். இந்த உலகப் பொதுமறையின் இரண்டடிகள் இனம், மதம், மொழி, காலம் எல்லாவற்றையும் தாண்டி மனித குலத்துக்கு ஒரு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அந்தத் திருக்குறளில், பெண்ணியச் சிந்தனைகள் எவ்வாறு கலந்து சிறந்து நிற்கின்றன என்று ஒரு பெண்ணின் பார்வையில் எடுத்துக்காட்டியிருக்கிறார் முனைவர் கோ.ப. செல்லம்மாள். நன்றி: தினத்தந்தி, 15/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *