உயிரே உனக்காக
உயிரே உனக்காக, எ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், த.பெ.எண். 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை – 17, பக்கம் 432, விலை 250 ரூ.
புதினங்கள், கட்டுரை எழுதுவதில் தனக்கென புதிய பாணியைப் படைத்து வாசகர் நெஞ்சில் இடம் பெற்றவர் நூல் ஆசிரியர். தினமலர் வாரமலரில் ஓராண்டுக்கும் மேலாக வெளிவந்த இந்தக் கதைக் கரு பலரது மனதை ஈர்த்திருக்கிறது. ஆசிரியர் நட்பு வட்டாரம் அளப்பரியது. ஆழமான மனவியல் உணர்வுகளை இதில் வரும் பாத்திரப்படைப்புகளில் எளிய தமிழில் புரிய வைத்திருக்கிறார். கதையின் பாத்திரங்களுடன் ஒன்றிய யதார்த்த சிந்தனைகள் தனித்தன்மையுடையதாக இக்கதைக் கருவை முன்னிறுத்துகிறது. எதிர்பாராத திருப்பங்களும் ஆர்வத்தை அதிகரிப்பவை. நல்ல புதினத்தை நாடும் அனைவரும் விரும்பும் படைப்பு இது.
—
ANCIENT YET MODERN – Management concepts in Thirukkural, வெ. இறையன்பு, அலைடு பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிட், 751, அண்ணாசாலை, சென்னை – 2, பக்கம் 272, விலை 250 ரூ.
அரசு நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு, தற்கால நிர்வாக முறை பற்றி, 2000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் தன் திருக்குறளில் குறிப்பிட்டுள்ளவற்றை விரிவாக ஒப்பீடு செய்துள்ளார். திருக்குறளில் மனிதவள மேலாண்மை குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகளை, தற்போதுள்ள மேலாண்மை பாடப் புத்தகங்களில் உள்ளவற்றுடன் ஒப்பீடு செய்துள்ளார். அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், குறை தீர்த்தல், பாதுகாப்பு போன்றவை தொடர்பாக, விரிவான கருத்துகள் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளதாக, ஆதாரத்துடன் குறிப்பிடுகிறார் இறையன்பு. ஒரு நிறுவனத்தின் சிறந்த நிர்வாகத்துக்கு, தொழிலாளர் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என வள்ளுவர் குறிப்பிட்டுள்ளதை, தற்போதுள்ள மேலாண்மை அணுகுமுறையுடன் ஒப்பிட்டுள்ளார். இதற்காக, ஏராளமான குறள்களை மேற்கோள் காட்டியுள்ள இறையன்பு, 90க்கும் மேற்பட்ட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஒப்பிட்டுள்ளார். சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய இந்நூல் ஒப்பீடு இலக்கியங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்படும். – பாபு
—
வாழ்க்கைச் சிறகினிலே… வாழ்வியல் சிந்தனைகள், இரா. குழந்தை அருள், மதி நிலையம், 2/3 நான்காவது தெரு, கோபாலபுரம், சென்னை – 86, பக்கம் 140, விலை 80 ரூ.
இந்நூலுக்கு ‘வனப்பும் வடிவமும்’ வழங்கியுள்ள தாய்மடி தமிழ்ச்சங்கத்தை, முதலில் பாராட்டவேண்டும். நல்ல விஷயங்களை, வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ளத் தேவையான யோசனைகளை, அறிவுரைகளை, நூலாசிரியர் நன்கு தெளிவுற வழங்கியிருக்கிறார். அநேக புத்தகங்களைப் படித்து, அனுபவபூர்வமாகக் கண்டறிந்த உண்மைகளை உணர்ந்து, இவர் எழுதியுள்ள நூல், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு. ராஜேந்திரன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளபடி, தமிழக மக்களின் கவனத்தை வசீகரிக்க வேண்டிய நூல். புத்தகத்தை சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ள மதி நிலையத்தாரின் பங்களிப்பு, நூலின் சிறப்புக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. – ஜனகன்