கண்ணன் வருவாயா
கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ.
வாசகர் உலகம் நன்கறிந்த சிறுகதை எழுத்தாளரான, வரலொட்டி ரெங்கசாமி, பகவத்கீதையைக் கையில் எடுத்திருக்கிறார். அத்துடன்கூட, மிகச் சிறந்த சிந்தனையாளர்களின் ஆன்மிக நூல்களையும், கருத்தூன்றிப் படித்திருக்கிறார். நிதானமாக உட்கார்ந்து சிந்தித்துவிட்டு, பகவத் கீதையின், 702 சுலோகங்களுக்கு எளிய தமிழ் நடையில் விளக்கம் (விரிவுரை? பாஷ்யம்?) எழுதியிருக்கிறார். ஏராளமான மேற்கோள்களைப் பொருத்தமான இடங்களில் சரியான விகிதத்தில் கோர்த்திருக்கிறார். மறக்காமல், அவர்களின் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார். பகவன் ஸ்ரீ ராமகிருஷ்ணர், மகாகவி பாரதியார், திருவள்ளுவர், கண்ணதாசன், சாமர்சாட்மாம், நக்கீரன் இப்படி பபலரைக் கையைப் பிடித்து அழைத்து வந்து, பகவத் கீதையின் ஆன்மிகப் பூந்தோட்டத்தில் உட்கார வைத்து, நமக்கு ஒரு ஆன்மிகப் பிரசாதம் வழங்கியிருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை எளிதாக்கி, அனைவருக்கும் சென்றடையச் செய்ய முடியும் என்பதில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார் நூலாசிரியர். -ஜனகன். நன்றி: தினமலர், 27/4/2014.
—-
செம்மேகம், கலியுகன் கோபி, இலக்கிய உயராய்வு மையம், கடலூர், விலை 40ரூ.
இது ஒரு கவிதை நூல். உழைப்பின் பெருமையை உழைப்பவரே உயர்ந்தவர் என்ற தத்துவத்தைக் கொண்டு பல கவிதைகளை புனைந்திருக்கிறார் ஆசிரியர். இதேபோல், உணவு, உடை, தீவிரவாதம், ஜல்லிக்கட்டு, தீபாவளி, சென்னை, கண்நோய் என பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர் தந்திருக்கும் கவிதைகள் புதுமையாக அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி.