சுவரில்லாமல் சித்திரம் வரையலாம்
சுவரில்லாமல் சித்திரம் வரையலாம், சேவியர், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, பக். 320, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-511-6.html
கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் பல, பரிசுகளும் பெற்றுள்ளன. இந்த நூலும்கூட இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. தினத்தந்தி இளைஞர் மலரில் இந்நூலாசிரியர் எழுதி தொடராக வெளியான 60 கட்டுரைகள், வாசகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. அவற்றின் தொகுப்பே இந்நூல். இதன் ஆரம்பக் கட்டுரையே ஆச்சரியப்படுத்துகிறது. தடுமாறி விழுந்தால்கூட எழுந்து நிற்க ஒரு கையாவது, ஒரு காலாவது ஒருவருக்கு அவசியம் தேவை. ஆனால் பிறவியிலேயே இருகைகளும், இரு கால்களும் இல்லாத ஒருவர், வளர்ந்து ஆளாகி, லிஃப்ட் வித்தவுட் லிம்ப் என்ற ஒரு நிறுவனத்தின் இயக்குனராக உயர்ந்த ஒரு ஆஸ்திரேலியரைப் பற்றிய கட்டுரை, படிக்கும் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையைத் தரும். அதேபோல் தாழ்வு மனப்பான்மையை உதறித் தள்ளுவது, நேர்மையாக இருப்பது, பெற்றோரைப் போற்றுவது, தேசத்தை நேசிப்பது, பிறர் தவறுகளை மன்னிப்பது, நன்றி மறக்காமல் இருப்பது… இப்படி பல நல்ல விஷயங்களை, வெற்றியாளர்கள் பலரின் உண்மைச் சம்பவங்களோடு இணைத்து, மனதைத் தொடும் வகையில், விறுவிறுப்பான நடையில் ஆசிரியர் இந்நூலை படைத்துள்ளது பாராட்டத்தக்கது. -பரக்கத். நன்றி: துக்ளக் 09/1/13.
—-
222 சைவ சமையல், சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன், கங்கா ராணி பதிப்பகம், 3/373, தொல்காப்பியர் தெரு, சண்முகா நகர், பொழிச்சலூர், சென்னை 74, விலை 105ரூ.
சைவ சமையல் செய்பவர்களுக்கு உதவும் நூல். கொளு பொங்கள், புரதச் சோறு, நவதான அடை போன்ற சத்தான சமையல் முறைகள் அடங்கியுள்ளன. நன்றி: தினத்தந்தி 10/4/13.