பாரதத்தின் பேரரசி
பாரதத்தின் பேரரசி (சாதனை வரலாறு), அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை 17, பக். 504, விலை 360ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-4.html
முதல்வர் அம்மாவின் வாழ்க்கை சரிதத்தை புதுக்கவிதை நடையில் தந்துள்ளார் கவிஞர் அழகிய பாண்டியன். அம்மாவின் வாழ்வில் அவர் சந்தித்த தடைகள், இடையூறுகள், சூழ்ச்சிகள், சோதனைகள் என்று ஒன்றுவிடாமல் அலசி, அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக் காட்டிய அவரது வீரத்தையும் காட்டி, அவரை பாரதத்தின் பேரரசியாக நம்முன் மிளிரச் செய்கிறார். அண்ணல் பிறந்தார் அகிம்சை பிறந்தது, புத்தர் பிறந்தார் அன்பு பிறந்தது, அன்னை தெரசா பிறந்தார், கருணை பிறந்தது, புரட்சித் தலைவி பிறந்தார் இவை அனைத்தும் பிறந்தன என்பன போன்ற சொல்வெட்டுக்கள் கல்வெட்டுகளைவிட மக்கள் மனதில் ஆழமாய் பதியும். இந்தியத் தலைவர்களே வியந்து போற்றும் அம்மாவின் தன்னம்பிக்கைகளை உலக அரங்கில் எடுத்துக்காட்டாய் வைக்கிறார். ஓர் அரசியல் தலைவரின் வாழ்க்கை புதுக்கவிதையில் வரலாற்றுக் காவியமாக படைப்பது இதுவே முதல் முயற்சி. முதன்மையான முயற்சியும் கூட சரித்திரம் பேசும்.
—-
அன்பென்ற மழையிலே, நா. முனியசாமி, வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசி குண்டு, சேலம், பக். 64, விலை 35ரூ.
உயிரினத்தை நேசிக்கிற கவிதைகளின் வரிசையில் அன்பென்ற மழையிலே கவிதைகளையும் சேர்க்கலாம். மழைக்குள் எல்லாம் அடக்கம். அன்புக்குள் எல்லாமே அடங்கும் என்கிறார் கவிஞர். எல்லா உயிர்களையும் சுமந்து கொண்டிருக்கும் நம் பூமித்தாய் பெற்ற அன்னையை விட நேசிக்கப்பட வேண்டியவர் என்ற கவிஞரின் மனமும் பூமித் தாய்க்கு இணையானதுதான். நம்பிக்கை எனும் சிறகுகளை விரித்து அசைத்துப் பார்க்கச் சொல்கிறார் கவிஞர். அப்போதுதான் நீ உயரத்தை அடைவது சாத்தியமாகும் என்கிறார். எத்தனை சத்தான வார்த்தைகள். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 05/06/2013.
—-
காற்றில் மிதக்கும் சொற்கள், எம்.ஏ.நுஃமான், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, விலை 60ரூ.
மலாய் மொழியில் பிரபல கவிஞரான லத்தீஃப் மொஹதீன் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஆங்கில மொழி பெயர்ப்பு மூலம் தமிழுக்கு கொண்டு வந்துள்ளார் எம்.ஏ.நுஃமான். மொத்தம் 52 கவிதைகள் உள்ளன. சற்றே சுதந்திரம் எடுத்துக்கொண்டு, மூலத்தின் தொனியில் இருந்து விலகிச் செல்லாமல் மொழிபெயர்த்திருப்பதாக நுஃமான் குறிப்பிட்டுள்ளார். நன்றி: இந்தியா டுடே, 05/06/2013
