உகரச்சுட்டு

உகரச்சுட்டு, முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பாலாஜி நகர், புழுதிவாக்கம், சென்னை 91, பக். 112,விலை 80ரூ.

தமிழ்மொழியில் அ, இ, உ என மூன்ற சுட்டெழுத்துக்கள் உள்ளன, இந்தியாவில் உள்ள பிற மொழிகளில் அ, இ என்னும் இரண்டு சுட்டெழுத்துக்களே உள்ளன. அ என்னும் சுட்டெழுத்து அவன் அவ்வீடு எனத் தொலைவில் உள்ள பொருளையும் இ என்னும் சுட்டெழுத்து இவன் இவ்வீடு என அருகில் உள்ள பொருளையும் குறிக்கும். உ என்னும் சுட்டெழுத்து தற்காலத்தில் பேசப்படுவதில்லை. உ என்னும் சுட்டெழுத்து தொலைவுக்கும் அருகுக்கும் இடையில் உள்ள பொருளைச் சுட்டுவதாக அகராதிகள் குறிக்கின்றன. பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் உகரம் பற்றி அகராதிகள் கூறுகின்ற கருத்தினை மறுத்து, இந்த நூலினை எழுதியுள்ளார். உ என்னும் சுட்டெழுத்து அருகிலும், தொலைவிலும் உள்ள பொருளைக் குறிக்காமல், கண்ணுக்கு தெரியாத பிற இடங்களில் உள்ள பொருள்களைச் சுட்டுவதற்குப் பயன்படுகிறது என்று இந்த நூலில் மெய்ப்பித்துள்ளார். இதற்காக சங்க இலக்கியம் முதல் தற்காலம் வரையிலும் உ என்னும் சுட்டெழுத்து இடம்பெற்றுள்ள பகுதிகளை எல்லாம் திரட்டி விளக்கியுள்ளார். இலங்கையிலும் உ என்னும் சுட்டெழுத்து கண்ணுக்குத் தெரியாத பொருளையே சுட்டுவதையும் இலங்கை எழுத்தாளர்களின் நாவல் சிறுகதைகளின துணை கொண்டு தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ்மொழியில் இன்னும் பல செய்திகள் ஆராயப்பட வேண்டியுள்ளன என்பதற்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு.  

—-

 

கம்பரிடம் யான் கற்ற அரசியல், டாக்டர் ம.பொ. சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை 14, பக். 224, விலை 85ரூ.

சிலம்புச் செல்வரின் 17வது நினைவுநாள் வெளீயீடாக இந்த நூல் மலர்ந்திருக்கிறது. சிலம்பிலும், கம்பனிலும், அய்யா ஆழங்கண்டு முத்தெடுத்த மூதறிஞர், முப்பெருங் கவிஞர்களின் பாராட்டு என துவங்கி, தத்துவ மேதை கம்பர் என, 19 அத்தியாயங்களோடு புத்தகம் நிறைவடைகிறது. வான்மீகியில் உள்ள உத்தரகாணடம் கம்பரால் பாடாதது ஏன்? என்ற வினாவை முன் வைத்து, தீண்டாத் திருமேனி சீதாப்பிராட்டியின் கற்பினை விளக்கி, ஆய்வு செய்து, சிலம்பையும், கம்பனையும் ஒப்பிடுவது (பக். 25-29) மிகமிக அருமை. கம்பனில் அதிகமாக விவாதிக்கப்படுகின்ற வாலி வதைப்படலம் பற்றி மிக நுணுக்கமாய் ஆய்வு செய்து, வாலி வதைப் படலம் என்பதை விட, வாலி மோட்சப் படலம் என்பதே பொருந்தும் என (பக். 109-116) ஓர் அற்புதமான புதிய நோக்கோடு ஆய்ந்துள்ள புலமை, வியக்க வைக்கிறது. அதிகார அரசியலுக்கு, தன்னை அடிமைப்படுத்திக் கொள்ளாதது கம்பராமாயணம் படித்துணர்ந்ததன் விளைவுதான் என, அரசியல் நோக்கில் கம்பனை விமர்சிப்பது, பக். 117-140 ஒவ்வோர் கம்பன் சுவைஞர்களும், படித்துணர வேண்டிய செய்தி. வாங்கிப் படித்து மகிழ வேண்டிய கம்பனின் தேனமுதம். -குமரய்யா நன்றி: தினமலர், 6-1-2013.  

—-

 

ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், ப.எண்-15/4, பு.எண்-33/4, ராமனாதன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 208, விலை 100ரூ.

ஸ்ரீ ஆதிசங்கரரின் ஜன்ம பூமியில் துவங்கி அவரின் பால பருவம், அத்வைத குரு பரம்பரை, தோடகாஷ்டகம், பஜகோவிந்தம், ஷண்மத ஸ்தாபகர், அவர் நிறுவிய மடங்கள் என முழு விவரத்தையும் தாங்கி வெளிவந்துள்ள நூல் இது. எளிமையான நடையில் அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். நன்றி: சக்தி விகடன், 25/12/12

Leave a Reply

Your email address will not be published.