மாலன் சிறுகதைகள்
மாலன் சிறுகதைகள், மாலன், கவிதா பப்ளிகேஷன், சென்னை 17, பக். 416,விலை 200ரூ.
ஆசிரியர் மாலன் பல்வேறு பத்திரிகைகளில், பல்வேறு காலகட்டங்களில் எழுதிய, 65 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகள் பற்றி தமிழன், தமிழ் இளைஞர்களின் இன்றைய நிலை குறித்து, மாலன் மிக அக்கறையோடு தாயுள்ளத்தோடு யோசித்துள்ளார் என கூறியுள்ளார் பிரபஞ்சன். ஆரோக்கியமான விவாதங்களை நம்முன் வைக்கும் சிறுகதை தொகுதி நூல். -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 6/1/13.
—-
காலத்தின் குரல் தி.க.சி., வே. முத்துக்குமார், ஆவாரம்பூ, 10, மேலப்பாட்டை நயினார்புரம், கல்லிடைக்குறிச்சி 627416, பக். 63, விலை 50ரூ.
1999ஆம் ஆண்டு வாக்கில் தி.க.சி. கணையாழியில் எழுதி வந்த காலத்தின் குரல் என்ற தொடர் கட்டுரைகளைத் தேடி தொகுத்து நூலாகக் கொணர்ந்திருக்கிறார் வே. முத்துக் குமார். அரிதினும் அரிதான முயற்சி, புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா, தகழி, வெ. சாமிநாதசர்மா, கே.சி.எஸ். அருணாசலம், கல்கி, டி.எஸ். சொக்கலிங்கம், கா.ஸ்ரீ.ஸ்ரீ., சரஸ்வதி ராம்நாத், கா. சிவத்தம்பி, சு.ரா. கோமல் போன்றோரின் இலட்சியங்கள் ஒரு நூற்றாண்டின் பெருங்கனவாக காலத்தின் குரலில் தி.க.சி. ஒலித்திருக்கிறார். ஒருவரிலிருந்து இன்னொருவரைத் தேடும் தேடல் முயற்சி இது.
—-
கேபிளின் கதை, கேபிள் சங்கர், நாகரத்னா பதிப்பகம், 3 ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை11, பக். 160, விலை 100ரூ.
பொதுவாக யாரும் அவர்கள் சார்ந்த துறையைப் பற்றி எழுத முன் வருவதில்லை. அந்த வகையில் கேபிள் சங்கர் தனது கேபிள் ஆப்ரேட்டர் அனுபவத்தை ஒளிவு மறைவு இல்லாமல் துணிந்து சொல்லியிருக்கிறார். கேபிளின் ரிஷிமூலத்திலிருந்து ஆரம்பித்து, கண்டிஷனல் ஆக்ஸஸ் சிஸ்டம், ட்ராய், அரசு கேபிள் என்று அதன் முழுக் கதையையும் வருங்காலத் தலைமுறைகளுக்குப் புரியும்படி சொல்லியிருக்கிறார். வெறும் அனுபவங்கள் என்ற அளவில் நிற்காமல் கேபிள் டி.வி. தொழில்நுட்பத்தில் ஊடுருவியிருக்கும் அரசியலையும் சொல்லியிருப்பதுதான் நூலின் வெற்றி. அரசு மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் எப்படி வருமானத்தை இழந்து வருகின்றன என்பதைக் கூறியதோடு எப்படி லாபம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையையும் தந்திருக்கிறார். நன்றி: குமுதம் 03/1/13.