ஜான் கென்னடி கொலையானது எப்படி
ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 120, விலை 70ரூ.
அமெரிக்காவில் ஜான் கென்னடி கொலை செய்யப்பட்டது ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சி. ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டத்தில் இருந்து கொலை வழக்கு விசாரணை முடியும் வரை, நடந்த விவகாரங்கள் என்ன என்பதை விவரமாக சொல்கிறது இந்தப் புத்தகம். உலகமே வியந்து போற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் இதில் நூலாசிரியர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கு பற்றிய யூகங்களும் விவாதங்களும் கி.பி. 2000த்திலும் தொடரும் என்று ஆஸ்வால்டு சுட்ட அன்றே நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் தீர்க்க தரிசனம் சொன்னது இன்று நிஜமாகிவிட்டது என்றும் ஆசிரியர் நிறுவுகிறார். ஒரு துப்பறியும் கதை போல சொல்லும் கட்டுரைகள் தொகுப்பு. மனம் கனத்துப் போகிறது. -எஸ். குரு. நன்றி: தினமலர், 13/4/2014.
—-
இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புகள், முனைவர் சு. பிச்சை, முனைவர் பா. ஆனந்தகுமார், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 187, விலை 130ரூ.
மகாகவி பாரதி மறைந்து சுமார் தொண்ணூறு ஆண்டுகள் நெருங்கும்போதும், பாரதியின் ஆளுமை இன்னும் நம்மை பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அவரை சுதந்திரத்துக்காகப் பாடியவன் என்ற இது சிமிழுக்குள் மட்டும் அடக்கி விட முடியாது. அதைத் தாண்டி அவரது ஆளுமை பல பரிமாணங்களில் விரிகிறது. இன்றும் அவரது படைப்புகள் பல்வேறு கோணங்களில் ஆய்வுக்கு உட்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட பல கட்டுரைகளைத் தொகுத்து முனைவர் சு.பிச்சை அவர்களும் முனைவர் பா. ஆனந்தகுமார் அவர்களும் பதிப்பித்து தமிழுலகுக்கு வழங்கியுள்ளனர். தொன்மவியல், குறியியல், உளவியல், இருத்தலியல், பயன்பாட்டுக் கொள்கை, செவ்வியல், பெண்ணியம், நவீனத்துவம், கவிதையியல், தலித்தியம், மார்க்சியம் என்ற பல்வேறு கோணங்களில் அவரது படைப்புகள் பல அறிஞர்களால் திறனாய்வு செய்யப்பட்டு இப்புத்தகத்தில், வெளியிடப்பட்டுளள்ன. பாரதியைப் பயிலப் பயில பேருருக்கொள்கிறார் மகாகவி. நன்றி: புதிய புத்தகம் பேசுது, 1/4/2014.