தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம், வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், 76, பாரதீஸ்வரர காலனி 2வது தெரு, பொன்மணி மாளிகை அருகில், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 100ரூ.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகள், மற்றும் சலுகைகளை தொகுத்து எழுதப்பட்ட இரண்டாவது சுதந்திரம் நூல், தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதனை வடகரை த. செல்வராஜ் எழுதி உள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மக்களுக்கு கிடைத்த பகல் சுதந்திரமாகும். இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டால் அரசின் செயல்பாடுகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்ற உயரிய நோக்கத்தில் தனிமனிதனுக்கு அரசிடமிருந்து பெற்று பயன்பெறும் விபரங்களை 6 அத்தியாயங்களில் நூல் ஆசிரியர் தொகுத்துள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சட்டம் விளக்கப்படுகிறது. நன்றி: தினத்தந்தி 10/4/13.  

—-

 

இதுதான் திராவிடக்கட்சிகளின் உண்மையான வரலாறு, கே.சி. லட்சுமி, நாராயணன், எல்.கே.எம்.பப்ளிகேஷன், சென்னை 17, பக். 704, விலை 400ரூ.

அது  என்ன உண்மையான வரலாறு?  மூத்த பத்திரிகையாளரான இந்நூலாசிரியர், தம் அனுபவத்தில் கண்டதையும், பல்வேறு நூல்கள், செய்திகளின் குறிப்புகளையும் கொடுத்து, தம் கருத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். திராவிடக் கட்சிகள் மிகுந்த துணிவுடன் வரலாற்றைத் திரித்துக் கூற முயல்கின்றன. தற்போது இந்த முயற்சி தீவிரம் பெற்றிருக்கிறது. இம்முயற்சி வெற்றி அடைந்தால் வருங்காலத் தலைமுறை பொய்களை உண்மை என நம்பிவிடும் அபாயம் உண்டு. இதனால் வருங்கால இந்தியாவுக்கு பேராபத்து என்பதாலேயே இந்நூலை எழுதினேன் என்கிறார் நூலாசிரியர் தம் முன்னுரையில். இரு கம்யூனிஸ்ட் இயக்கங்களும் மாறி மாறி திராவிடக் கட்சிகளை ஆதரித்து வருவது ஏன்? தனி நபர் வழிபாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையிலான அடிமைக் கலாசாரத்தை கம்யூனிஸ்ட்கள் சகித்துக் கொள்வது ஏன்? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார். தாம் குறிப்பிடும் திராவிடக் கட்சிகளின் தீய இயல்புகள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்கு இல்லை என்பதற்குச் சில உதாரணங்களைக் கொடுத்து விதிவிலக்காக்கிக் காட்டுகிறார். இந்த நூலில் கூடங்குளம் பிரச்சினை, 2ஜி ஊழல் விவகாரம், முஸ்லிம் லீக்கின் நாட்டுப் பிரிவினை வரலாறு, அதே நேரத்தில் தோன்றிய திராவிட இயக்கங்களின் பிரிவினைவாத அரசியல், ஈ.வெ.ரா. ராஜாஜி, சம்பத், அண்ணா ஆகியோரைச் சுற்றிய அரசியல் பின்னணி, தலித் அரசியல், நீதிக் கட்சியின் நிலை என வரலாற்றின் சுவடுகளை திருப்பிப் பார்க்க வைத்து அதன்மூலம் திராவிடக் கட்சிகளின் கொள்கை மாறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறார். வரலாற்றை அறிய விரும்புவோருக்கு ஏற்ற சிறந்த நூல். நன்றி: தினமணி 2/4/12.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *