தியாகசீலர் கக்கன்
தியாகசீலர் கக்கன், முனைவர் இளசை சுந்தரம், மதுரா வெளியீடு, சென்னை, விலை 100ரூ.
தியாகசீலர் கக்கன்ஜியைப் பற்றிய ஒரு விரிவான நூல் வெளியாவது இதுதான் முதல் முறை. அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்ட இந்நூலாசிரியர் மிகவும் சிரமப்பட்டிருப்பதை இந்நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. மிக எளிய குடும்பத்தில், அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர், விடுதலைப் போராட்ட வீரராகவும், சிறந்த கொள்கைப் பிடிப்புள்ளவராகவும், நேர்மையான அரசியல்வாதியாகவும், நிர்வாகத் திறமை மிக்கவராகவும், இறுதிவரை எளிய வாழ்க்கையையே விரும்பியவராகவும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உயர்ந்து விளங்கியுள்ளது பாராட்டத்தக்கது. இவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வரலாற்றுக் குறிப்புகள், விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகள், காந்தி, காமராஜ், நேரு போன்ற தலைவர்களுடனான தொடர்புகள், ஆட்சியில் அவர் புரிந்த சாதனைகள், அரசியலில் அவரது சுய ஒழுக்கங்கள் என்று பல விஷயங்கள் சுமார் 100 தலைப்புகளில் கூறப்பட்டுள்ளன. அதில் சுதந்திரப் போராட்டத்தின்போது கக்கனை போலீஸார் நினைவு இழக்கும்படி தாக்கியுள்ளார்கள். இந்த சித்தரவதை எதற்காக என்ற விபரத்தை படிக்கும்போது, எப்பேர்ப்பட்ட தியாகி என்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தனது மகளின் கணவருக்கு தகுதியிருந்து அரசு வேலைக்கு சிபாரிசு பண்ண முடியாது என்ற அவரது பிடிவாதம், அவரின் நேர்மையைப் பறை சாற்றுகிறது. இப்படி பல நிகழ்ச்சிகளைப் படிக்கும்போது, இப்பேர்ப்பட்டவர்களை இனி பார்க்கவாவது முடியுமா என்ற ஏக்கத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது. -பரக்கத். நன்றி: துக்ளக், 20/8/2014.
—-
சித்தி முக்தி சன்னிதி, கல்கி பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
நூலாசிரியர் கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன், தமிழகத்தில் உள்ள மகான்கள் அமைந்துள்ள சன்னிதிகளுக்கு சென்று தரிசித்து வந்த அனுவபம், அங்கு கிடைக்கும் அருள் போன்றவற்றை 17 கட்டுரைகளாக எழுதியுள்ளார். இவை ஏற்கனவே கல்கி வார இதழில் தொடராக வெளிவந்துள்ளது. மகான்கள் உலவிய பகுதிகளில் நாம் இருக்கிறோம் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக அனைத்து கட்டுரைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 30/4/2014.