திருஅருட்பா தொகுதி 1 மற்றும் 2

திருஅருட்பா தொகுதி 1 மற்றும் 2, சிவாலயம் ஜெ.மோகன், சிவாலயம் வெளியீடு, சென்னை, பக். 772, 586, விலை 650, 500ரூ.

மரபை பின்பற்றி புதிய பதிப்பு To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-205-0.html அகத்தே கறுத்து புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும், சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்து அடைவித்திட இறைவனால், இந்த உலகிற்கு வருவிக்க உற்ற அருளாளர் வள்ளல், ராமலிங்க அடிகள் இயற்றிய, 5818 பாடல்களை, இந்த பதிப்பாசிரியர் முந்தைய பதிப்பாளர்களை ஆதாரமாக கொண்டு, அழகுற பதிப்பித்துள்ளார். சைவ திருமுறைகள் பன்னிரண்டும், திருமுறைகள் என்றழைக்கபடுகின்றன. திருவெழுத்து ஆறு, சமயங்கள் ஆறு, அத்துவா ஆறு என்பனவற்றை உட்படுத்தி, திருவருட்பாவை திருமுறைகள் ஆறென, தொழுவூர் வேலாயுதனார் வகுத்திருக்கிறார் (பக். 60). முதல் நான்கு திருமுறைகள், 1867ல், வள்ளல் பெருமான் காலத்திலேயே வெளிவந்தன. ஐந்தாம் திருமுறை 1880களிலும், ஆறாம் திருமறை 1885களிலும் முதல் பதிப்பாக வெளிவந்தன. ஆறு திருமுறைகளும் சேர்ந்த முதற்பதிப்பு, 1892ல், பொன்னேரி சுந்தரம் பிள்ளையால் வெளியிடப்பட்டது. 1924ல் ச.மு.கந்தசாமி பிள்ளை வெளியீடும் குறிப்பிடத்தக்கது. 1931, 1958ம் ஆண்டுகளில் வெளியான, ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பை ஆதாரமாக கொண்டு, 1972ல், பொள்ளாச்சி நா. மகாலிங்கம் பேராதரவால், ஊரன் அடிகள் பதிப்பித்த திருவருட்பாவை உள்வாங்கி இந்த பதிப்பு வெளியாகி உள்ளது. ஆறு திருமுறைகளுக்கான வரலாறும், ஆராய்ச்சிக் குறிப்புகளும் (பக். 33-111) ஆதாரப்பூர்வமாக, முகப்பேடுகளின் படங்களுடன் இடம் பெற்றுள்ளது மிக சிறப்பு. ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயன்படும். இந்த பதிப்பில், ஆறு திருமுறைகளும் காலவரிசையில் வரலாற்று முறையில், பாடல்களுக்கு தொடர் எண் கொடுக்கப்பட்டு, அருஞ்சொற்களுக்கு ஆங்காங்கே விளக்கம் தரப்பட்டு, சந்தி பிரித்து எளிமையாக படிக்கும் வகையில் அச்சிடப்பட்டுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதியும் சேர்க்கப்பட்டுள்ளது. சன்மார்க்க சான்றோரின் அழகிய வண்ணப்படங்களும், அவர்களை பற்றிய குறிப்புகளும், அணிந்துரைகளும் நூலுக்கு அணிகலன்களாய் உள்ளன. -பின்னலூரான். நன்றி: தினமலர், 1/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *