பாண்டியர் காலச் செப்பேடுகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள், மு. ராஜேந்திரன், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 352, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-3.html
தமிழகத்தின் மிகப் பழைமையான பாண்டிய அரசு எப்போது ஆரம்பித்தது என்று குறிப்பிட்டு சொல்லமுடியாத நிலைமை இன்றளவும் நீடிக்கிறது. கி.மு.3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை கன்னியாகுமரியிலிருந்து திருப்பதி வரை ஆண்ட பெருமைக்குரிய பேரரசர்களாகவோ அல்லது தென்காசிப் பகுதிக்குள் மட்டுமே முடக்கப்பட்ட வலிமை குன்றிய சிற்றரசர்களாகவோ இருந்துள்ளனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் மதுரையைக் கைப்பற்றி ஆண்டபோது பாண்டிய அரசர்கள் தொடர்ந்து 350 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். காலத்தால் மிகப் பழைமையானவை பாண்டியர் காலச் செப்பேடுகள். பல பாண்டியர் காலச் செப்போடுகள் சிதைந்தும், உடைந்தும் போய்விட்டன. சில செப்பேடுகளில் சில இதழ்களும் காணாமலும் போய்விட்டன. எனவே, பாண்டிய நாட்டுச் செப்பேட்டுகளின் முழுச் செய்திகளும் நமக்குக் கிடைக்கவில்லை. தற்போது கிடைத்துள்ள பாண்டியர் செப்பேடுகளை வைத்துப் பார்க்கும்போது சில கேள்விகளுக்கு நமக்கு பதில் கிடைக்கவில்லை என்று ஆய்வாளர் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. காரணம், பாண்டியர் வரலாறு குறித்து ஆய்வறிஞர் மத்தியில் இன்றைக்கும் சில நெருடல்களும் கருத்து வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. பாண்டியர்கள் தொடர்புடைய 25 ஊர்களில் உள்ள செப்பேடுகளின் பெயர்கள், காலம், அதில் இடம்பெற்றுள்ள அரசரின் பெயர், செப்பேட்டின் முக்கிய செய்தி போன்றவை இந்நூலில் இடம் பெற்றள்ளன. பாண்டியர் காலச் செப்பேடுகள் பற்றிய முழுமையான ஆய்வு நூல் இது. நன்றி: தினமணி, 20/5/2013.
—-
ஆய்வுக் களஞ்சியம்(3 தொகுதிகள்), நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 208(1), 224(2), 212(3), விலை ரூ 110, 120, 110.
சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான, பேராசிரியை நிர்மலா மோகன், தனக்கு 60 வயது நிறைவு பெறுவதை முன்னிட்டு, 60 ஆய்வுக் கட்டுரைகளை, மூன்று தொகுதிகளாக தொகுத்து வெளியிட்டுள்ளார். தொகுதி ஒன்றில் சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளும், இரண்டில் பக்தி இலக்கியம் தொடர்பாகவும், மூன்றில் பாரதியார் முதல் சமகால கவிஞர்கள் வரை, புதுக்கவிதைகள் தொடர்பாகவும் தரமான ஆய்வு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியரின் எழுத்து வன்மையும் சுட்டப்படும் மேற்கோள்களும், சொல்லாட்சியும் மூன்று நூல்களிலும் மிளிர்கின்றன. முதல் இரண்டு தொகுதிகள், ஆய்வு மாணவர்களுக்கு வரப்பிரசாதம். -ஜி.வி.ஆர். நன்றி:தினமலர், 19/5/2013.