பாரதிதாசன் யாப்பியல்
பாரதிதாசன் யாப்பியல், ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 120ரூ.
எட்டயபுரத்துக் கவிஞரின் அடியொற்றி இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இரண்டாவது பெரும் கவிஞராகத் திகழ்ந்தவர் புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால் படைப்புகளின் எண்ணிக்கை என எடுத்துக்கொண்டால் பாரதியை விட அதிக படைப்புகளைத் தந்தவர் அவர். ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து, வண்ணம் என விதவிதமான யாப்பு வகைகளை தமது கவிதை இலக்கியங்களில் எழிலுறக் கையாண்டவர் அவர். மரபை அடியொற்றி மட்டுமின்றி, அதில் புதுமைகளைப் புகுத்தும் விதத்திலும் அந்தந்தச் சூழலுக்கு ஏற்பவும் பல்வேறு யாப்பு வகைகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளார். தமிழ் யாப்பு வடிவங்கள் பலவற்றை ஆற்றலுடன் ஆளும் திறம் பெற்ற பாரதிதாசனின் தனித்திறன் நுட்பங்கள் என அவரது கவிதை இலக்கியப் படைப்புகளில் உள்ள யாப்பியலை முழுமையாகவும், விரிவாகவும், நுட்பமாகவும் ஆராய்கிறார் இந்நூலாசிரியர். மேலும் யாப்பைப் பொறுத்தவை புதியவர்களுக்கும், புரியாதவர்களுக்கும் தமிழில் உள்ள யாப்பு வகைகள், வடிவங்கள் எவை எவை, அவற்றை எப்படி கையாளுவது என அறிந்துகொள்ள மிக எளிய கையேடாகவும் இந்நூல் பயன்படும். நன்றி: தினமணி, 22/9/2014.
—-
முதலுதவி, கல்கி பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
திடீரென்று விபத்துகள் ஏற்படும் போது, எலும்பு முறியலாம், காயங்கள் ஏற்படலாம். அவற்றுக்கும் மாரடைப்பு, தண்ணீரில் மூழ்குதல், விஷக்கடி போன்றவற்றுக்கும் முதலுதவி செய்வது எப்படி என்பதை இந்நூல் விளக்குகிறது. டாக்டர் கு. கணேசன், முதலுதவியின் போது எதை செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை தெளிவாகக்கூறுகிறார். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.