பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு, பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கங்கள் 480, விலை 325ரூ.
மறுக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் –சா. கந்தசாமி சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்கள். பத்திரிகைகள் நடத்தினார்கள். சத்தியாகிரகம் புரிந்தார்கள். தடியடி பட்டார்கள். சிறை சென்றார்கள். சிறையில் செக்கிழுத்தார்கள். கடைசியாக தூக்கில் போடப்பட்டார்கள். அவர்களில் பலரின் போராட்டப் பங்களிப்பு என்பது அதிகமாக இருந்தாலும், தங்களின் சொந்த நடத்தைகள், கருத்துக்கள், பேச்சுக்களால் தலைவர்களிடம் முரண்பட்டதால் பெரிய பதவிகளை பெறமுடியவில்லை. மரணத்திற்குப் பின்னர்கூட அவர்கள் மறுக்கப்பட்ட தலைவர்களாகவே இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் சேலம் பெருமாள் நாயுடு வரதராஜுலு நாயுடு. 1887ஆம் ஆண்டில் பிறந்து எழுபதாண்டுகள் வாழ்ந்த வரதராஜுலு நாயுடுவின் அரசியல், சமூக, பத்திரிகை பங்களிப்பை ஆய்வு, ஆவணங்கள் அடிப்படையில் எல்லோரும் அறிந்து கொள்ளும் விதமாக பழ. அதியமான் எழுதியிருக்கிறார். அதில் இரண்டு அம்சங்கள் பற்றித் தெளிவாகச் சொல்கிறார். அதில் முதல் அம்சம் வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய குருகுலம். பன்மொழி அறிவும், பரந்த அனுபவமும் கொண்ட அவரின் குருகுலம் தேசிய கல்விக்கூடமாக அமையும் என்று நம்பி காங்கிரஸ் கட்சியும் தமிழக மக்களும் தாராளமாக பொருள்கள் வழங்கினார்கள். ஆனால் வ.வே.சு. ஐயர் குரு குலத்தில் சாதி வேறுபாடு காட்டப்பட்டது. பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தனி பந்தியில் உட்கார வைக்கப்பட்டு பழைய சோறு போடப்படுகிறது என்று நாயுடு கிளர்ச்சி செய்தார். பெரியார் மற்றும் சமூக அக்கறை கொண்ட பலர் சேர்ந்து உழைத்தார்கள். மகாத்மா காந்தியிடம் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. இடையில் வ.வே.சு. ஐயர் அருவியில் வீழ்ந்த மக்களைக் காக்க முற்பட்டு இறந்துபோனார். ஆனால் போராட்டம் நடந்து கொண்டே இருந்தது. ஆனால் சேரன்மகாதேவி குருகுல போராட்டம் தமிழ் மக்களிடையே கல்வி, சமூக உணர்வு என்பதை முன்னெடுத்துச் செல்ல ஒரு காரணமாக அமைந்தது. வரதராஜுலு நாயுடு ஒரு சமூகப் போராளியாகவே இருந்தார். பாலக்காடு மாவட்டத்தில் பார்ப்பனர்கள் வாழும் கல்பாத்தி தெருவில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக்கூடாது என்று இருந்ததை ஒழிக்க முனைப்புடன் செயல்பட்டார். அவர் காங்கிரசில் இருந்தாலும் நீதி கட்சிக்காரர் இல்லை. ஆனால் பார்ப்பனர் அல்லாதவர் நலம் காப்பதில் முன்னே இருந்தார். அவர் வாழ்க்கையில் அது ஓர் அம்சமாகவே இருந்துவந்தது என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ்காரராக வாழ்க்கையைத் தொடங்கி பத்திரிகை நடத்தி சிறைக்கு எல்லாம் சென்ற வரதராஜுலு நாயுடு 1939ஆம் ஆண்டில் இந்து மகா சபையில் சேர்ந்தார். தென்னாட்டுத் தலைவர்களில் இந்து மகா சபையில் சேர்ந்தவர் அவர் ஒருவர்தான். அவர் நாடறிந்த தலைவராக, பேச்சாற்றல் மிக்கவராக இருந்தார். அவர் திறமை, ஊக்கத்தைப் பயன்படுத்தி இந்து மகா சபையை வளர்த்துவிடலாம் என்று கருதி சாவர்க்கர் அவர்க்குப் பொதுச் செயலாளர் பதவி கொடுத்தார். ஆறாண்டுகள் இருந்தார். பொதுவாகத் தன் வழியே சிறந்தது என்று நம்பும் அவரால் நீடித்து இருக்க முடியவில்லை. இந்து மகா சபையில் இருந்து வெளியே வந்துவிட்டார். காங்கிரஸில் மறுபடியும் சேர்ந்துகொண்டார். 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நின்றார். மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து எம்.எல்.ஏ.வானார். ராஜாஜி முதல்வரானதும் அவர் கொண்டு வந்த கல்வி திட்டம் குல கல்வி திட்டமென எதிர்க்கட்சிகளால் விமர்சனிக்கப்பட்டு பெரும் எதிர்ப்புக்கு உள்ளானது. அதனை எதிர்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் நாயுடு முன்னே இருந்தார். பெரும் போராட்டத்திற்குப் பிறகு ராஜாஜி பதவி விலகினார். காமராஜர் தமிழக முதல்வரானார். ‘பெரியாரின் நண்பர்’ என்று சொல்லப்பட்டிருக்கும் டாக்டர் வரதராஜுலு நாயுடு, உண்மையில் பெரியார் நண்பர் இல்லை. அரசியலில் யாரும் நண்பர்கள் கிடையாது. அவர் காங்கிரஸில் இருந்தபோதும், இந்து மகா சபையில் இருந்தபோதும், பெரியாருடன் இணைந்து சமூக நீதி, பாப்பனார் அல்லாதார் நலம் பற்றிப் போராட்டம் நடத்தியபோதும், ராஜாஜியுடன் இணக்கமாக இருந்தபோதும் அவர் தனியாகவே இருந்தார். ‘நான் அவர் சீடர்’ என்று அடக்கமாகச் சொல்லிக் கொண்டார் பெரியார். அது தான் வரதராஜுலு நாயுடு. அவர் வாழ்க்கை ஒரு வெற்றிகரமான வாழ்க்கை. அதனையே பழ. அதியமான் கடுமையான உழைப்பின் வழியாகச் சொல்லியிருக்கிறார். சொல்லப்பட்டிருப்பதின் வழியாக சொல்லப்படாத வாழ்க்கையை அறிந்து கொள்ள வைக்கிறார். நன்றி: புத்தகம் பேசுது, ஆகஸ்ட் 2012 ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-203-5.html