வெள்ளையானை,

வெள்ளையானை, ஜெயமோகன், எழுத்து வெளியீடு, மதுரை, விலை 400ரூ.

To buy this Tamil book online: www.nhm.in/shop/100-00-0002-186-7.html ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது தமிழகத்தில் ஏற்பட்ட மாபெரும் பஞ்சம், அந்தப் பஞ்சத்தில் மடிந்துபோய் வரலாற்றில் பதியப்படாத பெரும் தொகையிலான மக்கள், சாதி இந்துக்களால் கொடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித் மக்கள் இந்தச் சம்பவங்களின் பதிவே வெள்ளையானை நாவல். 1921ம் ஆண்டு சென்னையில் முதன்முதலாக அமைப்பாக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் மூலம் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தலித்துகள் புறக்கணிக்கிறார்கள். தலித் தலைவர் எம்.சி.ராஜாவின் வேண்டுகோளை ஏற்று, தலித் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாததால் மாபெரும் கலவரம் வெடிக்கிறது. இந்தப் போராட்டத்தில் தலித்துகள் கலந்து கொள்ளாததற்கான காரணத்தைத் தேடுவதில் இருந்துதான் வெள்ளையானையின் வேர்கள் தொடங்குகின்றன. அந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தூண்டுதலாக இருந்தவர், தலித் அரசியலின் முன்னோடியும் தமிழ் பௌத்தம், திராவிடன், தமிழன் ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலை முன்வைத்தவருமான அயோத்திதாசர் என்ற யூகத்தின் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயரின் போகக் கொண்டாட்டங்களுக்காக, இங்கிலாந்து தண்ணீரில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கட்டிகள் கப்பல் மூலம் வந்து சென்னையில் சேமிக்கப்பட்ட பிராந்தியமே ஐஸ் ஹவுஸ். அங்கே உள்ள 10 யானைகளின் எடைகெண்ட பிரமாண்ட பனிக்கட்டியே வெள்ளையானை. ஐஸ் ஹவுஸில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மேற்சட்டைகூட அணியாமல் இருக்கிறார்கள் என்று சொல்வதன் மூலம் வெள்ளையானை அதிகாரத்தின் குறியீடாகவும் ஒடுக்குமுறையின் உருவகமாகவும் படைத்திருக்கிறார் நாவலாசிரியர். அயர்லாந்தில் பிறந்து, பிரிட்டிஷ் அதிகாரியாக சென்னையில் பணிபுரியும் ஏய்டன் என்கிற வெள்ளை அதிகாரியின் பார்வையில் இருந்து நாவல் விரிகிறது. அறத்தின்பால் பற்றுதலும் இலக்கியங்களின் மீதான ஆர்வமும் கொண்ட ஏய்டன் சென்னை மாகாணத்தில் சாதி இந்துக்களால் தலித்துகள் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படுவது… அதைக் கண்டும்காணாமல், சாதிய அமைப்பு சீர்குலையாமல் தங்கள் வணிக நலன்களைப் பேணும் பிரிட்டிஷ் அதிகாரவர்க்கம்… இரண்டையும் ஒருசேரப் பார்க்கிறார். தலித்துகளின் சுயமரியாதையை உறுதிசெய்வதற்கும், அப்போதைய உணவுப் பஞ்சத்தைத் தடுப்பதற்கும் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் ஏய்டன் தோற்றுப்போகிறார். செங்கல்பட்டுக்குச் செல்லும் வழியில் ஏய்டன் காணும் பஞ்சக் காட்சிகள், இந்த நாவலின் உயிர்ப்புமிக்க பகுதி. பாதி எலும்புக்கூடுகளாக உள்ள குழந்தைகள், தொர தொர என உணவுக்காக இறைஞ்சித் துரத்தும் காட்சி துயரத்தின் காட்சி. இந்த நாவலின் பெரும்பகுதி வர்ணனைகள், விவரிப்புகள், ஏய்டனின் மன ஓட்டங்களாகவே கடக்கின்றன. வரலாற்றின் இயக்கங்கள் உயிர்ப்புடன் பதிவுசெய்யப்படாமல் எல்லாவற்றையும் வார்த்தைகளாலேயே விவரித்துவிடமுடியும் என்று நூலாசிரியர் நினைத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. தலித் பாத்திரங்களான காத்தவராயன், கருப்பன், ஜோசப் ஆகியோரின் உரையாடல்களில் செயற்கைத்தன்மை அப்பிக்கிடக்கிறது. இருப்பினும் நாவலின் இறுதி அத்தியாயத்தில் அத்தனை உயிர்ப்பு, தமிழில் மிக முக்கியமான பதிவு வெள்ளையானை. நன்றி: விகடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *