வைணவ இலக்கியம்
வைணவ இலக்கியம், கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 152, விலை 50ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-538-0.html வைணவத்தின்பால் கொண்ட பற்று காரணமாக, இந்நூலாசிரியர் பல்வேறு இடங்களில் நடத்திய சொற்பொழிவின் தொகுப்பே இந்த நூல். பொய்கை ஆழ்வாரின் சிந்தனைகள், திருமாலை, திருப்பாவை, ஆண்டாளும் மீராபாயும் உள்ளிட்ட 13 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆழ்ந்த கருத்துகள், பொருத்தமான திருவாய்மொழி, திருவந்தாதி பாடல்கள் அதற்கான விளக்கமுடன் அமைந்த கட்டுரைகளில் முழுமையான வைணவ இலக்கியத்தை நம்மால் நுகர முடிகிறது. யசோதை கண்ணனிடம் கொண்டது வாத்சல்யம் எனப்படும் தாயன்பு. குசேலனின் பக்தி சாக்யபாவம், ராமனிடம் அனுமன் கொண்ட பக்தி தாச பாவம், கடவுளை கணவனக நினைத்து பக்தி செலுத்துவது மதுர பாவம் என பக்தியில் இத்தனை வகைகளா? என்ற வியப்பு மேலோங்குகிறது. அதேபோல், ஆழ்வார்களும், ஆண்டாளும் ஸ்ரீ ரங்கம் அரங்கநாதன் மேல் அருளிச் செய்த மொத்த பாசுரங்கள் 247 என்பதும் தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையும் 247 என்பதும் ஆச்சரியம் தரும் விஷயம். மேலும் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு முன்னதாகவே திருமாலில் தசாவதாரம் எனப்படும் பத்துப் பிறவிகளும் உயிரினங்களை வகைப்படுத்தி காட்டியுள்ளதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. வைணவத்தின் சிறப்புகளை எளிதாகவும் சுருக்கமாகவும் தெரிந்து கொள்வதற்கு சிறப்பானதொரு நூல் இது என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி, 24/3/2014.
—-
மண் மொழி மக்கள், வாலி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சலை, சென்னை, பக். 88, விலை 75ரூ.
கவிஞர் வாலி குமுதத்தில் எழுதி முற்றுப்பெறாமல் முடிந்த தொடர் இது. தனக்கு வாலி என்று பெயர் வைத்த நண்பன் பாபு தொடங்கி, விடுதலைப்புலி பிரபாகரன், கவியரசு கண்ணதாசன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பாரதியார், பி.பி.ஸ்ரீநிவாஸ், விசுவநாதன் ராமமூர்த்தி, எம்.எஸ்., டி.எம்.சௌந்தர்ராஜன் என்று குறுகிய காலத் தொடரிலேயே நிறைய ஆளுமைகளைக் கொண்டு இந்த நாட்டின் மண்ணையும் மக்களையும் மொழியையும் நமக்கு அவரது நடையில் பதிவு செய்துவிட்டுப் போகிறார். வாலி உயிருடன் இருந்து இத்தொடர் முழுமை பெற்றிருந்தால், தமிழகத்திற்கு புதிய கலை இலக்கிய வரலாற்று ஆவணம் கிடைத்திருக்கும். அந்தளவிற்கு அரிய பெரிய பயனுள்ள விஷயங்கள் அத்தனையும். நன்றி: குமுதம், 2/4/2014.