மறைமலைஅடிகள் வரலாறு
மறைமலைஅடிகள் வரலாறு, மறை. திருநாவுக்கரசு, மறைமலை அடிகள் பதிப்பகம், பக். 784, விலை 600ரூ.
தனித் தமிழ்ப் போராளி, சீர்திருத்த சைவத்தை நிலைநாட்டிய உழைப்பாளி மறைமலை அடிகளாரின் நீண்ட வரலாற்று நூல். ஆழ்ந்த சைவப் பற்று, வடமொழி ஆற்றல், ஆங்கிலப் புலமை பெற்ற மறைமலை அடிகளார் 1876 முதல் 1950 வரை 74 ஆண்டுகள், தமிழையும், சைவத்தையும் எவ்வாறெல்லாம் முன்னெடுத்துச் சென்றார் என்பதை அவரது மகனார் மறை. திருநாவுக்கரசு இந்த நூலில் சுவைபட எழுதியுள்ளார். இவரது மகனார் மறை. தி. தாயுமானவன், 54 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் மறுபதிப்பு செய்து, வரலாற்றை மீட்டெடுத்துள்ளார். வடமொழி, ஆரிய மதம் இவற்றை வளர்க்கும் பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள், மடங்கள், சடங்குகள் எல்லாவற்றையும் கண்டித்து, தமிழ் நாகரிகம், தமிழ் மொழி, தமிழர் மதம், தமிழ்ச் சடங்குகள் பற்றி 1913ல் அடிகள் பேசினார். ஈ.வெ.ரா. போன்றவர்களின் கடவுள் மறுப்பை மறைமலை அடிகள் ஏற்கவில்லை. தமிழருக்கு சமயம், கடவுள் வழிபாடு உண்டு என்றார். ஆலய வழிபாடு செய்யும் ஆதிசைவர்களும், வைணவப் பட்டமார்களும் பிராமணர் அல்லார் இவர்கள் ஆதி சைவர்கள், இவரைத் தமிழில் பூஜை செய்ய பழக்க வேண்டும் என்கிறார் (பக். 388). ஆங்கிலேயரை ஆதரித்த இந்திய விடுதலையை எதிர்த்த அடிகளாருடன், அவரது மகன் திருநாவுக்கரசாகிய காந்தியத் தொண்டர் நடத்திய குடும்பப் போராட்டம், சத்திய சோதனைபோல உண்மையை நிலைநாட்டுகிறது. அடிகளாரின் சில பங்களிப்புகள் நூலைப் படிபோருக்கு வியப்பூட்டுவன சில இதோ- திருவள்ளுவர் ஆண்டு கி.மு. 31 என்று விவாதித்து முடிவுகண்டார். திருவள்ளுவர் சைவ சமயத்தவர் என்றார். சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகமும், சைவ சமாஜங்களும் நிறுவி சைவத்தை உயர்த்தினார். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 30/3/2014.
—-
கல்கியின் சிறுகதைகள்(பாகம் 2), கல்கி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 640, விலை 345ரூ.
வரலாற்று நாவல்கள், பெரு நாவல்கள் போன்றவற்றில் தன் எழுத்து வன்மையைக் காட்டியிருக்கும் போராளியர் கல்கி சிறுகதைகளிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். இந்த இரண்டாம் தொகுதியில் 40 கதைகள் உள்ளன. இவற்றில் திருவழுந்தூர் சிவக்கொழுந்து, தேவகியின் கணவன், பவானி பி.ஏ.பி.எல். போன்ற நெடுங் கதைகளும் அடக்கம். கல்கி நேயர்களுக்கும், சிறுகதைப் பிரியர்களுக்கும் நல்விருந்து இந்தத் தொகுப்பு. -கேசி. நன்றி: தினமலர், 30/3/2014.