அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்
அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள், ஸ்டீபன் ஆர். கவி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ், குர்காவ்ன் ஹரியானா, பக். 507, விலை 325ரூ.
2 கோடிப் பிரதிகள் விற்றுள்ள புத்தகம் என்ற பெருமையுடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி மனிதரும், நான்தான் என் வாழ்வின் படைப்பு சக்தி என்று கண்டுபிடித்துக் கொள்வதுதான் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை குறித்த கொள்கையாக வரலாறு முழுவதும் விளங்கிவருகிறது. நன்னெறிகளை அடித்தளமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படுகின்ற வாழ்க்கைமுறையையும், தலைமைத்துவத்தையும் குடும்பங்களிலும் நிறுவனங்களிலும் எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பது மிக எளிமையாக இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்கள் யாரையேனும் ஆய்வு செய்தால் அவர்கள் 1. முன்யோசனையுடன் செயலாற்றுதல், 2. முடிவை மனதில் வைத்துத் துவங்குதல், 3. முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல், 4. எனக்கும் வெற்றி, உனக்கும் வெற்றி, 5. முதலில் புரிந்து கொள்ளுதல், பின்னர் பிறருக்குப் புரிய வைத்தல், 6. கூட்டு இயக்கம், 7. கூர் தீட்டிக் கொள்ளுதல் ஆகிய ஏழு பழக்கங்களை நிச்சயம் கொண்டிருப்பார்கள் என்று கூறும் நூல். இந்த ஏழு பழக்கங்களை நிச்சயம் கொண்டிருப்பார்கள் என்று நூல். இந்த ஏழு பழக்கங்களையும் எப்படி வளர்த்தெடுப்பது, வளர்த்தெடுக்கும்போது ஏற்படும் தடைகளை எப்படி வெல்வது? என்பன போன்ற ஏராளமான சுயமுன்னேற்றத்துக்கான வழிகாட்டும் கருத்துகள் அடங்கியுள்ள புது வரவு இந்நூல். நன்றி: தினமணி, 24/6/13.
—-
ஷேக்ஸ்பியரின் நீதிக்கதைகள், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 35ரூ.
ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற நாடகங்களான 12ம் இரவு ஒதெல்லோ தி டெம்பஸ்ட், மாக்பெத், வெனிஸ் வர்த்தகன் ஆகியவை, கதை வடிவில் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அழகிய தமிழில் ஐந்து கதைகளையும் எழுதியுள்ளார் முல்லை பி.எல். முத்தையா. நன்றி: தினத்தந்தி, 5/6/13.
—–
தத்துவ முத்துக்கள், இல. பாண்டுரெங்கன், அன்றில் பதிப்பகம், 14(192) ஜெகஜீவன்ராம் சாலை(பெல்சு சாலை), சேப்பாக்கம், சென்னை 5, விலை 50ரூ.
மனிதன் நல்வழியில் செல்லவும் வாழ்வில் உயர்வடைய வேண்டும் என்பதற்காகவும் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், மகான்களும், அறிஞர்களும் பல தத்துவங்களை உதிர்த்துச் சென்றுள்ளனர். அதுபோன்ற சிறந்த தத்துவங்களின் தொகுப்பாக இந்நூல் உயர்ந்து நிற்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/6/13.