அனுபவச் சுவடுகள்
அனுபவச் சுவடுகள், டாக்டர், கு. எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை ரூ.125.
வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களையும் அவர்களால் ஏற்பட்ட அனுபவங்களையும் பற்றியும் நினைவு கூர்தலே இந்நூல். கல்லூரி படிப்புக்கு வழிகாட்டும் ரங்க ஐயங்கார், ஆங்கிலம் தெரியாத கண்ணுச்சாமி, வெளிச்சத்தை உருவாக்கிக் கொள்ளும் கந்தசாமி, சந்துருவின் மனைவி, மகள் எனப் பலவகையான மகத்தான மனிதர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன். அத்துடன் ஒவ்வொரு சம்பவத்தையும் ஒரு குட்டி சிறுகதைபோல் சுவாரசியமாக தொகுத்து அளித்திருப்பது சுகமானது. நன்றி: தினத்தந்தி, 18/12/13.
—-
விஸ்வ பிரம புராணம், பிரம்மஸ்ரீ அ. முத்துச்சாமி பாரதியார், பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஆச்சாரியார் பவுண்டேஷன், பக். 510, விலை 650ரூ.
தீபாவளி மலர் போன்ற பெரிய சைஸ் புத்தகமான இது, 119 ஆண்டுகளுக்குப் பின் மறுபதிப்பாக வெளிவந்துள்ள புராண நூல். சுவிரத மகராஜாவுக்கு காளஹஸ்தி முனிவரால் கூறப்பெற்ற வடமொழி சுலோக வடிவிலான, இப்புராண நூலை அருமையான தமிழ்ப் பாக்களாக்கி அதற்கு விரிவான உரையும் எழுதி வெளியிட்டிருக்கின்றனர். 45 அத்தியாயங்களில் உலகின் தோற்றம் மனித குலத்தின் வருண தருமங்கள், கோத்திர வகைகள், சாத்திரங்கள், சடங்குகள்ள ஆகியவை விவரிக்கப் பெற்றுள்ளன. கடவுளர்கள் பற்றியும், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் போன்ற திருத்தொண்டர்கள் பற்றிய செய்திகளும் உள்ளன. விரும்பியவர்கள் படிக்கலாம். -கவுதமநீலாம்பரன். நன்றி: தினமலர், 18/12/13.