அரசகுலச் சான்றோர் வரலாறும் மதுரைக் காஞ்சியும்
அரசகுலச் சான்றோர் வரலாறும் மதுரைக் காஞ்சியும், எஸ்.டி. நெல்லை நெடுமாறன், ஆ. தசரதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2ம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 113, பக். 256, விலை 115ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-145-4.html
புறநானூற்று மூவேந்தர்களில் பாண்டியர், பழைய பாண்டிய அரசகுடியும் சான்றோர் குடியும், சான்றோர்குல மகளிரின் தலையாய கற்பு ஒழுக்கங்கள், எழுநூற்றுவர் சான்றோரும் நிழல் வாழ்நரும், தொல்குடி வேளிரான சான்றோர் குடியினரும் வேள்வியும், மதுரைக்காஞ்சியில் சான்றோர் குலத் தலைவர்கள், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகிய தலைப்புகளில் அரசகுலச் சான்றோரின் வாழ்க்கை வரலாற்றை விவரித்து ஆதரங்களுடன் விளக்கியுள்ளார். பக்கங்களில் இடம்பெறும் அடிக்குறிப்புகளை அந்தந்தப் பக்கங்களின் அடியிலேயே தந்திருப்பது சிறப்பானது மட்டுமல்ல, உடனுக்குடன் அந்நூல்களைப் பார்வையிட உதவியாகவும் உள்ளது. முத்தாய்ப்பாக பாண்டிய மன்னனுக்குப் பஞ்சவன் என்ற பெயருண்டு என்பதைப் பல சான்றாதாரங்கள் கொண்டு நிறுவியுள்ளனர். தமிழக இலக்கிய வரலாற்றைத் தோண்டத் தோண்ட எத்தனை புதையல்கள் அமிழ்ந்து கிடக்கின்றனவோ என்ற பிரமிப்பு இந்நூலைப் படிப்பவருக்குக் கட்டாயம் ஏற்படும். நன்றி:தினமணி, 9/1/2012.
—-
ரவீந்திர சங்கீத், சு. கிருஷ்ணமூர்த்தி, சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 75ரூ.
இறையியல், காதல், வீரம், நாட்டுப்பற்று, இயற்கையழகு உட்பட பல்வேறு தலைப்புகளில் ரவீந்திரர் 2500க்கும் மேற்பட்ட வங்காளிப் பாடல்களை எழுதி உள்ளார். இவற்றிலிருந்து நம்நாடு, வழிபாடு என்ற தலைப்புகளில் எழுதப்பட்ட நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தமிழாக்கம் செய்யப்பட்ட நூல் ரவீந்திர சங்கீத். வழிபாடு பாடல்களில் வைணவத் தத்துவத்தில் முக்கியமாக இடம்பெற்றுள்ள முழுமையான சரணாகதி என்ற உணர்வு இந்தப் பாடல்களில் வெளிப்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 4/9/2013.