அருளிச்செயல் அமுதமும் தொல்புகழ் அமுதமும்
அருளிச்செயல் அமுதமும் தொல்புகழ் அமுதமும், என்.எஸ்.கிருஷ்ணன் ஸ்வாமி, வரமங்கை பதிப்பகம், சென்னை 5, பக். 398, விலை 200ரூ.
கம்பராமாயணப் பாடல்களில் ஆழ்வார் பாசுரங்களின் தாக்கம் எவ்வளவு தூக்கலாக இருக்கிறது என்பதைத் தெளிவான விளக்கங்களுடனும் பொருத்தமான மேற்கோள்களுடனும் முன்வைக்கின்ற நூல். பி.ஸ்ரீ.ஆச்சாரியாவுக்குப் பிறகு ஆழ்வார்களையும் கம்பனையும் ஒப்பிட்டு இவ்வளவு ஆராய்ச்சிப்பூர்வமாக யாரும் எழுதியதில்லை. கம்பனின் ஆறு காண்டங்களிலுள்ள அனைத்துப் பாடல்களையும் ஆசிரியர் அலசிப் பார்த்திருப்பதை நூலைப் படிக்கும்போது உணரமுடிகிறது. குறிப்பாக ஓர் கருஞாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி என்கிற திருவாய்மொழிப் பாடலும் கரு ஞாயிறு போல்பவர் காலொடு போய் என்கிற கம்பனின் பாலகாண்டப் பாடலும் எவ்வாறு ஒத்திருக்கிறது என்பதையும், அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன் என்கிற கம்பரின் கிஷ்கிந்தா காண்டப் பாட்டு எவ்வாறு மணவாள மாமுனிவனின் ஆர்த்திப் பிரபந்தத்தில் வரும் அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாமறியார் என்ற பாட்டோடு ஒத்திருக்கிறது என்பதையும் ஆசிரியர் விளக்கியிருக்கும்விதம் அருமை. திருமால் அடியார்களுக்கும் கம்பதாசர்களுக்கும் கிடைத்திருக்கும் அரிய பொக்கிஷம் இந்நூல். நன்றி: தினமணி, 5/11/2012
—-
நினைவு என்னும் நீள்நதி, உதயசங்கர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 120ரூ.
மனித வாழ்க்கையில் சில நேரம் நடைபெறும் சம்பவங்கள் சிறந்த படிப்பினையை வழங்கும். அவ்வாறே இந்நூலின் ஆசிரியர், தான் சந்தித்த, தன்னுடன் பழகிய பல்வேறு நபர்கள் மூலம் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக அளித்துள்ளார். வெறும் கட்டுரையாக இல்லாமல், பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி, சுவாரஸ்யமாக படிக்கும் பாங்கிலும் புத்தகத்தை வடித்திருப்பதில் ஆசிரியரின் கைவண்ணம் புலப்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.