அவர்கள் பெண்கள்
அவர்கள் பெண்கள், லூர்துமேரி, நாஞ்சில் பதிப்பகம், 67/1, கோர்ட் ரோடு, நாகர்கோவில் 629001, விலை 125ரூ.
கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னிக் கொண்டிருக்கும் புனித பெண்களின் வாழ்க்கைத் தொகுப்பு. இயேசு உயிர்தெழுந்ததும் முதலில் பார்த்த மகதலேனா மரியாள், ஆலயத்தில் இருந்து நீங்காமல் இரவும் பகலும் நோன்பிருந்தபடி அதே நேரம் இறைப்பணியையும் தொடர்ந்த அன்னா, மாமியார் மெச்சிய மருமகள் ரூத், தங்கள் யூத இனத்தையே அழிவில் இருந்து தப்பிக்க வைத்த எஸ்தரின் ஞானம் என ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இறையன்பே கொட்டிக் கிடக்கிறது. விதிவிலக்காக, அடிமையாக வந்த அன்னிய ஆடவன் யோசேப்பு மீது மையல் கொண்டு தடம் மாறத் துணிந்த போத்திபாரின் மனைவி போன்றவர்களின் எச்சரிக்கைக் கதைகளும் உண்டு. சம்பவக் கோர்வையை காட்சிப்படுத்தியதில் ஆசிரியரின் திறமை பளிச்சிடுகிறது.
—–
ஆண்களை ஹாண்டீல் செய்வத எப்படி?, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,சென்னை 14, விலை 175ரூ.
ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமைகள் சரிசமாக இருக்கலாம். ஆனால் இருவருக்கும் இருக்கும் உளவியல் வேறு வேறு.ஆணின் மூளை அமைப்பும், மனப்போக்கும் சில விதங்களில் பெண்களை விட முற்றிலும் வித்தியாசமானவை.இதுபற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் ஒரு பெண் எத்தனை காலம் போராடினாலும் ஆணை கையாளுவது கஷ்டமாகவே தோன்றும். ஆண் எப்படியெல்லாம் வித்தியாசப்படுகிறான். இந்த வித்தியாசங்களைப் புரிந்து கொண்டு அவனுக்கேற்றாற்போல் எப்படி செயல்பட்டு அவனைக் கையாண்டு ஜெயிப்பது என்பது பற்றி அருமையான ஆலோசனைகளைத் தந்திருக்கிறார். புகழ்பெற்ற உளநலவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி பெண்களுக்கு இந்த நூல் நல்லதொரு தோழியாகவும், சிறந்ததொரு வழிகாட்டியாகவும் இருக்கும். நன்றி: தினத்தந்தி 20-02-2013.