ஆய்வுச் சுடர்கள்
ஆய்வுச் சுடர்கள், முனைவர் ந. வெங்கடேசன், அய்யா நிலையம், பக். 112, விலை 70ரூ.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, முந்தைய இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை, எதையும் விடாமல் அத்தனையையும், திறனாய்வு நோக்கில் இந்த நூல் அணுகுகிறது. பள்ளு என்னும் சிற்றிலக்கியம் காட்டும் மருத நில வளத்தையும், சைவத் திருமுறைகள் காட்டும் வாழ்வியல் செய்திகளையும், அழகாக ஆய்வுக்குட்படுத்தியுள்ளார் ஆசிரியர். மு.வ. எனச் சுருக்கமாக அழைக்கப்பெறும், மு. வரதராசனாரின் உரைநடைத் திறனை வெளிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டிற்குரியது. தமிழ் இலக்கிய அறிமுகத்தையும், ஆய்வையும் நோக்கில் படையெடுக்கப்பட்டுள்ள இந்த நூல், எல்லாரும் படிக்க வேண்டியது. -முகிலை ராச பாண்டியன். நன்றி: தினமலர், 16/6/2013.
—-
அருளிச் செய்த அமுதமும் தொல்புகழ் அமுதமும், வித்வான் என். எஸ். கிருஷ்ணன் சுவாமி, ஸ்ரீவர மங்கை பதிப்பகம், பக். 398, விலை 200ரூ.
கற்பார் இராம பிரானையல்லால் மற்றும் கற்பரோ? என்று நம்மாழ்வார் கூற்றுக்கிணங்க. இன்று தமிழகத்தில் கம்பராமாயணம் மிக்க சிறப்புடன் திகழ்கிறது. அக்கம்பராமாயணப் பாடல்களில், பல ஆழ்வார்கள் பாசுரங்களின் தாக்கம் எப்படிப் பொதிந்துள்ளது என்பதை இந்நூல் விரிவாகக் கூறுகிறது எனலாம். இந்நூலில் பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரை, கம்பன் பாடல்கள் பலவும், ஆழ்வார்கள் பாசுரங்களின் சொற்களும், கருத்துக்களும் கம்பனின் உணர்வினில் அழுத்தமாகப் பதிந்து, அவரின் பாடல்களில் வெளிப்படுகிறது என்பதை, இந்நூல் விரிவாக விளக்குகிறது. நூலாசிரியரின் ஆழ்ந்து, அகன்ற கல்வி அறிவை நூல் முழுவதும் தெளிவாகக் காண்கிறோம். -டாக்டர் கலியன்சம்பத்து. நன்றி: தினமலர், 16/6/2013.