ஆரியம் திராவிடம் இந்தியம்

ஆரியம் திராவிடம் இந்தியம், வ. பாரத்வாஜர், காவ்யா, சென்னை, பக். 376, விலை 340ரூ.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கும் நூலாசிரியரின், வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நம் நாட்டில் ஆரியம், திராவிடம் என இரு பிரிவுகளாக இந்தியத் தத்துவ மரபுகள் விரிந்துகிடக்கின்றன. இந்நூல் கட்டுரைகளில் ஆரியம் குறித்தும், திராவிடம் குறித்தும் பேசப்படுகின்றது. இந்தியாவின் சமூகம், அரசியல், சமயம், கலாசாரம், மொழிகள், இனம், வரலாறு என எது குறித்தும் பேசினாலும் ஆரியம், திராவிடம் என இந்தியம் அதில் கரைந்து கிடக்கிறது. இரண்டையும் இந்தியத் தொன்மை அடையாளச் சொல் என்றும், சுதேசியத் தன்மை கொண்ட அடையாளங்களே என்றும் குறிப்பிடும் நூலாசிரியர், பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்துக்குப் பின்னர் விதேசியத்தன்மை கொண்டதாக, 1850களில் கால்டுவெல் மூலம் ஆரிய திராவிட இனவாதம் புனையப்பட்டதாக எடுத்துக் காட்டுகளுடன் கூறுகிறார். ஆயினும் தற்போதைய அரசியல் சூழலில் இரண்டு பிரிவும் ஒன்றையொன்று எதிரெதிர் நிலைகளில் உள்ளதாக பிரசாரம் செய்யப்பட்டு வருவதைச் சுட்டிக் காட்டும் நூலாசிரியர், சுதந்திரப் போராட்ட கால கட்டத்தின், பிரிட்டிஷாரின் பிரித்தாளும் தன்மையிலான பிரசாரத்தையும் மீறி இரண்டும் கைகோத்து நின்றதை தம் கட்டுரைகளில் சுட்டிக்காட்டுகிறார். தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கேடுகள், அம்பேத்கர் இயக்கம் ஆகியவற்றின் பின்னணியை எடுத்துக் காட்டி, இவற்றில் உள்ள இந்தியம் எப்படித் தன்னை வெளிப்படுத்துகிறது என்பதையும் ஒரு கட்டுரையில் ஆழப்பதிக்கிறார். சமூக, அரசியல் பின்புலத்தில் கருத்துகளை முன்வைப்போரும், பேசுவோரும் சிந்திப்போரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய களஞ்சியமாக இந்த நூல் திகழ்வது சிறப்பு. நன்றி: தினமணி, 14/4/2014.  

—-

அதிர்ஷ்ட எண்கள், ஏ. ஜெயப்பிரகாஷ், ஸ்ரீஅலமு பதிப்பகம், சென்னை, விலை 35ரூ.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது முதுமொழி. ஒருவரின் பெயரும் அவரது வாழ்வில் பங்கெடுக்கிறது. அது சரியாக இருக்க வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால், அவருக்கு அதிர்ஷ்டம் தரும் எண்களின்படி பெயரை அமைத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும் என்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 16/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *