ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள்
ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், மாத்தளை சோமு, தமிழ்க்குரல் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ.
மீண்டும் வரலாம் புன்ட்ஜில் கடவுள்
பெரும்பாலும் வாய்மொழி இலக்கியமாகவே வலம் வருகிற பழங்கதைகள் சொல்லாமல் சொல்லி விளங்கவைக்கும் சிந்தனைகள் ஆழமானவை. இவற்றைப் புரிந்துகொள்ளவும் தனிப்பட்ட திறமை வேண்டும். அதுவும் ஆதிவாசிப் பழங்குடியினரிடையே உலவும் கதைகள் என்றால் அவற்றின் மதிப்பே தனி.
அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அபாரிஜின் என்னும் ஆதிவாசிப் பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்கள் என்றும், இவர்கள் இந்தியத் துணைக்கண்டப் பகுதியிலிருந்து சென்று குடியேறிய கற்கால மனிதர்களின் வழித் தோன்றல்கள் என்றும் தம்முடைய விரிவான முன்னுரையில் குறிப்பிடுகிறார் மாத்தளை சோமு.
ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடையே வழங்குகிற கதைகளை முன்பே ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றின் துணைகொண்டு வெவ்வேறு வகையான சுவையும் பயனும் நிறைந்த 94 கதைகளைத் தமிழில் தருகிறார் இந்நூலாசிரியர்.
பஞ்சதந்திரக் கதைகள் போன்று அநேகமாக எல்லாக் கதைகளிலும் மனிதர்கள் பேசுவதைவிட விலங்குகள் பேசுவதே உரத்துக் கேட்கிறது. கடவுளின் கோபம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள கதை இன்றைய நாகரிக நிலையின் அவலத்தின் மூலகாரணத்தைச் சொல்கிறது. அவர்கள் எங்கு சென்றாலும் மிருகங்களோடு இந்த பூமியைப் பகிர்ந்து வாழாமல் மிருகங்களுக்குப் பெருந்தீங்கு செய்தார்கள். இதனைக் கண்ட மிகப் பெரிய கடவுளான புன்ட்ஜில் கோபம் கொண்டார் என்று தொடங்குகிறது கதை.
கிட்டத்தட்ட பௌராணிகர்கள் சொல்லும் கலியுகத்தின் பேரூழியைச் சொல்வதுபோல் இருக்கிறது. இதே கதை சுருக்கமாக 14ஆம் கதையாக இடம் பெற்றிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
-சுப்ர. பாலன்.
நன்றி: கல்கி, 20/9/2015.