இடைவேளை
இடைவேளை, ஆர். வெங்கடேஷ், நேசமுடன், சென்னை 28, பக். 152, விலை 100ரூ.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார மந்தத்தினால், அயல் பணிகளை ஏற்றுச் செய்த இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பால் அங்கு பணியிலிருந்தவர்கள் அதன் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் நிலைக்குலைந்து போன சிலர் தற்கொலை வரை போனதுமான சோகம் இவையே இந்நாவலின் களம். ஐ.டி. நிறுவனங்களில் பணியாளர்கள் சேர்க்கப்படுவது எளிது. நீக்கப்படுவது அதனினும் எளிது. அப்படி நீக்கப்பட்டவர்கள் தங்கள் தகுதிக்கும் ஊதியத்துக்கும் ஏற்ற அடுத்த வேலையைத் தேடும் வரையிலான அந்த இடைவேளை எவ்வளவு இரக்கமற்றது என்பதை இந்த நாவல் தெளிவாக உணர்த்துகிறது. நாவலின் களம் புதியதாக இருந்தாலும் பாத்திரங்கள் நமது அன்றாட வாழ்வில் பார்த்துப் பழகியவர்களாக இருப்பதால், நாவலில் அன்னியத் தன்மை தவிர்க்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வேலையிழந்த மன உளைச்சலில் இருக்கும் ரஞ்சனோடு, பூஜா பேசும் உரையாடல் ஒரு கவிதை. நாவலின் ஒவ்வொரு பாத்திரமும் அதனதன் அளவில் சிறப்பாக வார்க்கப்பட்டுள்ளது (லதாவைத் தவிர). ஐ.டி.நிறுவன உலகின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைத் துல்லியமாகவும், சுவையாகவும் பதிவு செய்துள்ளார் நாவல் இது. நன்றி: தினமணி, 19/8/2013.
—-
தமிழ் வளர்த்த தமிழர்கள், மகா பதிப்பகம், 3, சாய்பாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை 73, விலை 60ரூ.
தமிழை வளர்க்க வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர், நாடகத்தை சங்கரதாஸ் சுவாமிகள், மறைமலை அடிகளார், மகாகவி பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி. கல்யாண சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மு. வரதராசனார் ஆகியோருடைய வாழ்க்கை வரலாறுகள் கொண்ட நூல். சுருக்கமாகவும், சுவைபடவும் தேசிய நல்லாசிரியர் தா. சீனிவாசன் இந்த நூலை எழுதியுள்ளார். தமிழறிஞர்கள் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள சிறந்த நூல். குறிப்பாக இளைய தலைமுறையினருக்குப் பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 28/11/2012.