இந்தியச் சிறுகதைகள் (1900-2000)
இந்தியச் சிறுகதைகள் (1900-2000), தொகுப்பாசிரியர்-இ.வி.ராமகிருஷ்ணன், தமிழில்-பிரேம், பக்.549, சாகித்ய அகாதெமி, தேனாம்பேட்டை, சென்னை-18.
இருபத்து ஏழு இந்திய மொழிகளில் இருந்து மிகச்சிறந்த கதைகளை தேர்வு செய்து வாசகர்களுக்கு புதிய வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது இந்நூல். ஒவ்வொரு மாநிலங்களிலும் வாழும் மக்களின் வேறுபட்ட தன்மைகள், சிக்கல்களை பிரதிபலிக்கும் கதைகள். புனிதங்கள், புனிதமற்றவை, மேல்தட்டு சிந்தனைகள், ஒடுக்கப்பட்டவர்களின் சிந்தனைகள் எனப் பல நிலைகளைத் தெளிவாகப் படம் பிடித்து காட்டுகின்றன இந்தக் கதைகள். இந்திய மொழிகளில் இந்நூற்றாண்டின் சில பத்தாண்டுகளில் எழுதப்பட்ட இச் சிறுகதைகள் கொந்தளிப்பில் இருந்த ஒரு தேசத்தின் மனநிலையையும், இயக்கப் போக்கையும் பதிவு செய்கின்றன. இந்நூற்றாண்டில் வங்கமொழி, உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகள் மிகச்சிறந்த சிறுகதைகளை உருவாக்கித் தந்திருக்கின்றன என்பதற்கு இப்புத்தகத்தில் இருக்கும் கதைகளே சிறந்த சான்று. இதில் உள்ள பெரும்பாலான கதைகள் சுதந்திரப் போராட்ட காலத்தில் எழுதப்பட்டவை என்பது உண்மை என்றபோதிலும், இக்கதைகள் எதிலும் காலனி ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்குமான நேரடி மோதல்களின் சித்தரிப்புகள் இல்லை. இக்கதைகளை முழுமையாக வாசிக்கும்போது பாரத தேசத்தின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டிய அவசர, அவசியத் தேவை என்ற கருத்தை ஒவ்வொரு இளைஞர்களின் மனதிலும் பதியவைக்க இப்புத்தகம் மிகச்சிறந்த கருவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்திய கலாசாரத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துக்காட்டும் மிகச்சிறந்த காலக்கண்ணாடி இது. நன்றி: தினமணி, 16.07.2012