இந்தியப் புதையல் ஒரு தேடல்
இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், பக். 520, விலை 300ரூ.
To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-221-2.html ஆன்மிகத்தில் உச்ச நிலையை அடைவதற்காக பால் ப்ரன்டன் என்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் இந்தியாவில் மேற்கொண்ட பகீரத பிரயத்தன பயணங்களை விளக்கும் நூல். 1930களில் அவ்வளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இதற்காக பல ஆண்டுகள் இந்தியா முழுவதும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், நதிக்கரைகளிலும், குகைகளிலும் அலைந்து திரிந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது ராதா சுவாமி அமைப்பின் சாஹப்ஜி மகராஜ், சென்னையில் பிரம்ம சுகானந்தா போன்ற மேன்மைமிகு ஆசான்களையும், சில கபட வேடதாரிகளையும், மாயவித்தைப் புரிபவர்களையும் சந்தித்ததைச் சுவைபட பதிவு செய்துள்ளார் பால் ப்ரன்டன். காஞ்சி பரமாச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்த பின், அவரது அறிவுறுத்தலின்பேரில் திருவண்ணாமலையில் ரமண மகரிஷியைச் சந்தித்த பின்தான், அவரது தேடல் நிறைவு பெறுகிறது. தனது சந்தேகங்களுக்கு வாய்மொழியாக அதிகம் பதில் கூறாமலேயே தனது அருள் பார்வையாலேயே பூரண நிலையை ரமண மகரிஷி உணர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் ப்ரன்டன். படிக்கும்போது இது மொழிபெயர்ப்பு நூல் என்ற எண்ணமே ஏற்படாத அளவுக்கு நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பால் ப்ரன்டன் யார், அவரது பின்னணி என்ன என்பது பற்றி சிறு குறிப்பும் இல்லாதது ஒரு குறை. தனக்கேற்ற குருவைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என்பதையும், இறுதி வெற்றி அடையும் வரை முயற்சியைக் கைவிடக்கூடாது என்பதையும் அறிந்து கொள்ள அன்மிக ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. நன்றி: தினமணி, 25/6/2014.
—-
கள்ள ஓட்டு, கே. செய்யது அப்துல் கரீம், செய்யது ஹோம் பப்ளிஷர்ஸ், வண்ணார் பேட்டை, திருநெல்வேலி 3, விலை 80ரூ.
வெவ்வேறு ஆசிரியர் எழுதிய 20 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல். இருக்கும்போது கவனிக்காமல் தாய் இறந்த பின் கதறியழும் கல்நெஞ்சக்காரமகன், நேர்மையாக வாழ நினைத்து சக மனிதர்களால் எள்ளி நகையாடப்படும் ஒருவன், ஆணின் அன்பிற்காக ஏங்கும் பெண்கள், பிரியாணிக்காகவும், பணத்திற்காகவும் தன் ஓட்டுரிமையை விற்கப்பிடிக்காத முதியவள் என பாத்திரப் படைப்புகள் மனதைத் தொடுவதாய் உள்ளன. எதற்கும், யாரிடமும் சமரசமும் செய்து கொள்ளத நல்ல மனிதர்களை நோகடிக்கிற சமூகத்தில் இந்த மாதிரி கதைகளின் தேவை என்றும் இருக்கத்தான் செய்யும். நன்றி: தினத்தந்தி, 28/5/2014.