இயற்கையுடன் இசைந்த பெரு வாழ்வு
இயற்கையுடன் இசைந்த பெரு வாழ்வு, பேரா. ஜான்சி ஜேக்கப், மொழிபெயர்ப்பு யூமா வாசுகி, புலம், சென்னை, விலை 60ரூ.
பேரா. 1936ஆம் ஆண்டு கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் நாட்டகம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குறிச்சி என்னும் ஊரில் பிறந்தவர். விலங்கியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் உயர் கல்வி பயின்றவர். 1978ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் முதன்முறையாக இயற்கையுடன் இருத்தல் என்னும் முகாமை நடத்தினார். 1979ஆம் ஆண்டு SEEK (Society for Environmental Education in Kerala) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இயற்கையுடன் இசைந்த வாழ்க்கை குறித்து, 2008ஆம் ஆண்டு தான் இறக்கும் காலம் வரை செயல்பட்டு வந்தவர். இயற்கையுடனான அவர் வாழ்க்கை குறித்த உரையாடல், டி.எஸ். ரவீந்திரனால் என் வாழ்க்கை தரிசனம் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து சில பகுதிகள்… தேவை பல்வகை உணவுகள் நாம் உணவுகளைக் குறித்து நிறைய ஆய்வுகள் நடத்தியிருக்கிறோம். ஆதி மனிதனின் உணவைக் குறித்தும். ஐந்து, ஆறு வகையான தானியங்களை மட்டுமே இன்று மனிதர்கள் உண்கிறார்கள். கிழங்குகளை நாம் முற்றிலும் கைவிட்டுவிட்டோம். கிழங்காக இன்று உருளைக்கிழங்கு மட்டுமே பாக்கியிருக்கிறது. தவிர்க்க முடியாமல் கூடுகளில் ஒரு துண்டு சேப்பங்கிழங்கோ, சேனைக்கிழங்கோ சாப்பிடலாம். அதே நேரத்தில் பாப்வா நியூகினியாவில் ஆதிவாசிகள் ஏறத்தாழ நூற்று அறுபது வகையான தாவரங்களை வளர்த்து உணவாகப் பயன்படுத்துகிறார்கள் என்று இன்று நமக்கு தெரியவருகிறது. இதில் என்ன வித்தியாசம் என்று கேட்டால் நம் முன்னோர்கள் ஒரு ஆகாரத்தை மட்டும் தின்று உயிர் வாழவில்லை. மரங்களில் வசிக்கும் காலத்தில் ஒரு குரங்கு என்னவெல்லாம் உண்கிறது என்று பார்க்கும்போது அவை பழங்களை மட்டும் உண்ணவில்லை. ஒரு பழத்தை மட்டும் தின்னவில்லை. நிறைய இலைகளையும் தின்கிறது. அவற்றின் மொட்களைத் தின்பதுண்டு. பூக்களைத் தின்கிறது. புழுபூச்சிகளைப் பிடித்துத் தின்கிறது. எறும்பைப் பிடிததுத் தின்பதைப் பார்த்தேன். இடையில் ஒரு வேட்டை உண்டு. மிருகத்தைப் பிடித்துத் தின்னக்கூடும். பறவையைப் பிடிக்கலாம். பறவையின் முட்டையைத் தின்னக்கூடும். பல விதமான உணவுகளைச் செரிப்பதற்கானதுதான் அவற்றின் உணவுக்குழாய். நம் முன்னோர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. சமீப காலம் வரை நாம் உணவு குறித்த விஷயத்தில் வளர்ந்திருந்தோம். கேரளத்து மக்கள் பிரத்தியேகமாகச் சத்தான உணவு உண்டு வந்தார்கள். நாம் மூன்று வேளையும் அரிச உணவு உண்டவர்கள் அல்ல. காலையில் நாம் கிழங்குகள் சாப்பிட்டோம். மதியம் ஒரு சாப்பாடு, நிறையக் காய்கறிகள். மாலை நேரத்தில் கஞ்சியும் பயறும். புஷ்டியான உணவு இது. இன்று நாம் மிருகத்தைக் கொன்று மீனையும் மாமிசத்தையும் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கிறோம். இந்தப் பெட்டியிலிருந்த இறந்த உடலை வெளியே எடுத்து வெட்டி உணவு சமைத்துத் தின்கிறோம். இது எவ்வளவு தூரம் நம் ஆரோக்கியத்திற்குக் கெடுதல் செய்கிறது என்று நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. நம் ஆரோக்கியத்தின் சிதைவு நமக்குப் பல்வகை உணவுகள் தேவைப்படுகின்றன. அதை நாமே மறுக்கும் நிலையில் நோய்கள் உண்டாகின்றன. நோய்கள் உண்டாகும்போது அதற்குக் காரணங்களைத் தேடலாம். நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்த, குடிக்கும் நீரிலிருந்து நாம் பெறுகிற நோய்களைக் குறித்துப் பேச நம்மால் முடியவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்று முறையிடலாம் என்று நினைத்தால் அது செல்லுபடியாகாது. ஒருவருக்குப் புற்றுநோய் வருகிறது. அதுதான் குடித்த நீரில் குளோரினால்தான் வந்தது என்று நீதிமன்றத்திற்குச் சென்று சொல்லமுடியாது. குளோரின் மட்டும் காரணம் அல்ல. நிறைய விஷயங்கள் இருக்கின்றன. புற்றுநோய்க்குக் காரணமான நூறு இருநூறு அம்சங்கள் இருக்கின்றன. நாம் தின்கிற, பயன்படுத்துகிற பலவற்றாலும் புற்றுநோயை ஏற்படுத்த முடியும். அப்போது முழுமைத் தன்மையில் ஏற்படக்கூடிய சிதைவு, உணவு நிலையில் ஏற்படும் சிதைவு, நம் ஆரோக்கியத்தின் சிதைவாக மாறுகிறது. சமூக நீதியின் சிதைவாக மாறுகிறது. இந்த நிலைமை இந்தியா முழுவதும் உண்டு. நன்றி: தி இந்து, 8/2/2014.