சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், சாதத் ஹசன் மண்ட்டோ, தொகுப்பும் மொழி பெயர்ப்பும், உதயசங்கர்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை 98, பக். 174, விலை 145ரூ.

உருது மொழி இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான சாதத் ஹசன் மண்ட்டோவின் 13 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை இக்கதைகள் பதிவு செய்திருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே கொளுத்தப்பட்ட மதவெறித் தீயினால் நாடு பிரிவினைக்குள்ளானதும், அது மக்களுடைய வாழ்ககையிலும் மனதிம் ஏற்படுத்திய பாதிப்புகளும் மண்ட்டோவின் சிறுகதைகளின் அடித்தளமாக இருக்கின்றன. அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கை, அவர்கள் பட்ட பாடுகள், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ஆணாதிக்க சமூகத்தால் சிதைக்கப்பட்ட பெண்களின் மேன்மைகள், மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் மக்களை ஏமாற்றுபவர்கள், மக்கள் மனங்களில் மூட்டிவிடப்பட்ட பிரிவினைத் தீ எழுப்பிய தேவையில்லாத பகை உணர்ச்சி என இச்சிறுகதைகள் அனைத்தும் நாட்டின் அக்கால அரசியல், சமூக, பொருளாதார, கலாசாரச் சூழல்களைப் பின்புலமாகக் கொண்டிருக்கின்றன. இவற்றைப் படிக்கும் இக்காலத்திலும்கூட இப்பிரச்னைகள் தொடர்ந்து இருந்து வருவது நம்மை உறுத்தவே செய்கிறது. தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகளைப் படிக்கிறோமோ என்ற உணர்வை இந்த மொழிபெயர்ப்பு நூல் ஏற்படுத்துகிறது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். நன்றி: தினமணி, 2/2/2014.  

—-

 

துருக்கியில் முஸ்லிம் ஆட்சி, சையித் இப்ராஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 288, விலை 160ரூ.

துருக்கியர், இஸ்லாமிய சரித்திரத்தில் சிறந்த பங்கு பெற்றுப் பணியாற்றி வந்திருக்கின்றனர். இந்திய முஸ்லிம்கள், குறிப்பாக சென்ற நூறு ஆண்டுகளாக, துருக்கியருடன் நெருங்கிய தொடர்பு கெண்டுள்ளவர்கள் தாம். இந்நூலில் துருக்கியை ஆண்ட முஸ்லிம்களைப் பற்றிய, சுருக்கமான ஆனால், விரிவான பேனாச் சித்திரங்களுடன் ஆசிரியர் எழுதியுள்ளார். குறிப்பாக வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல். -சிவா. நன்றி: தினமலர், 9/2/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *