இருள் நீக்கி
இருள் நீக்கி, தொகுப்பாசிரியர் ஆர். கரிகாலன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், பக். 208, விலை 95ரூ.
சனாதன தர்மம் என்று கூறப்படும் ஹிந்து மதம், பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றியது என்றாலும், சுமார் 1500 வருடங்களுக்கு முன்தோன்றிய ஆதிசங்கரரால் இம்மதம் மறுமலர்ச்சி கண்டது. அவர் உருவாக்கிய காஞ்சி சங்கர பீடத்தின் தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீஜெயந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஹிந்து மதம் குறித்து எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு பல்வேறு சமயங்களில் அளித்த விளக்கங்களையெல்லாம், இந்நூலாசிரியர் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஹிந்து மத வழிபாட்டு முறைகள்; ராமாயணம் – மஹாபாரதம் – பகவத்கீதை புகட்டும் நீதிநெறிகள்; குல தெய்வ வழிபாட்டின் அவசியம்; தர்மம் – அதர்மம், தியானம் – ஜபம் பற்றிய விளக்கங்கள்; ஹிந்து மதம் பெண்களுக்கு அளித்துள்ள சிறப்புகள்; கணவன் – மனைவிக்கும், பெற்றோர் – பிள்ளைகளுக்கும் உள்ள கடமைகள்; விரதங்கள், பூஜைகள், பிரார்த்தனைகள், பஞ்சாங்கம், ஜாதகம், கைரேகை, சகுனம், அபசகுனம், திருஷ்டி, தோஷம், சிராத்தம், தர்ப்பணம், பக்தி யோகம், ஞானயோகம், கர்ம யோகம், கடவுள், ஆன்மா, கர்மா ஆகியவை பற்றிய விளக்கங்கள்; ஹிந்து மதத்திற்கும் மற்ற மதங்களுக்கும் உள்ள வித்தியாசம்… என்று நூற்றுக்கணக்கான ஹிந்து சமய விஷயங்களுக்கான விளக்கங்கள் எளிய தமிழ் நடையில், இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையாளரான இந்நூலாசிரியர், ஹிந்து மத அன்பர்கள் எளிதாக படித்துணரும் வகையில் கேள்வி – பதில் வடிவில் இந்நூலை ஆக்கியுள்ளது சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 2/9/2015.