இவள் நெருப்புக்கு இணையானவள்
இவள் நெருப்புக்கு இணையானவள், ஞா. சிவகாமி, மணிமேகலை பிரசுரம், பக். 136, விலை 100ரூ.
இத்தனை சிறிய நாவலில், எத்தனை எத்தனை விஷயங்களைப் பற்றி ஆசிரியை பேசுகிறார் என்ற பிரமிப்பு உண்டாகிறது. வாழ்க்கையில் பலதரப்பட்ட அனுபவங்களை இவர் பெற்றிருப்பதால், ஒவ்வொரு தனிப்பட்ட அனுபவத்தையும், ஒவ்வொரு அத்தியாயங்களாக்கி, இந்த நாவலைச் செய்திருக்கிறார். பீக் ஹவர் பஸ் பயண அனுபவம், லஞ்ச ஊழல்கள், ஜாதி வேற்றுமைகள், முதியோர் இல்லத்தில் அவதியுறும் முதியவர்கள் என, பல பிரச்னைகளை இந்த நாவலில் அலசுகிறார். இவர் தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்தவர் என்பதால், ஏழைகளின் கோரிக்கை மனுக்களை பார்த்து, உள்ளம் பதைபதைத்திருக்கிறார் என, வாழ்த்துரையில், மூத்த கம்யூ. தலைவர் நல்லகண்ணு கூறியிருக்கிறார். இந்தியாவில் தொழிலாளி, தொழிலாளியாக மட்டுமல்ல. உழைப்பாளியாகவே இருந்து மடிகிறான். தொழிலாளியால், பலர் முதலாளிகளாகிவிட்டனர். ஆனால் நாடு தான் இன்னும் முன்னேறிய பாடில்லை (பக். 57, 58) என்ற இவரது நெருப்பு வசனம், இவரது சிந்தனையை காட்டுகிறது. பாராட்டப்பட வேண்டிய முதல் முயற்சி. -எஸ். குரு. நன்றி: தினமலர், 31/8/2014.
—-
மதிநுட்பக் கதைகள், வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன், பக். 312, விலை 350ரூ.
கதைகள் கேட்டும், படித்தும் தம்மைச் செம்மைப்படுத்திக் கொண்டனர் நம் முன்னோர். கதைகளின் நோக்கமே மனக் கோணல்களை நீக்குவதுதான். சில கதைகள் ஒருவர் அடி மனதில் ஆழப்பதிந்து, அவர் வாழ்நாள் முழுவதும் அதை மறக்காமல், அக்கதை கூறும் நல்வழியில் சென்று, புகழ்பெறுவர் என்றும் கூறலாம். எடுத்துக்காட்டாக அரிச்சந்திரன் கதை, மகாத்மா காந்தியடிகள் வாழ்வில் என்றும் வழிகாட்டியாக நின்று, அவரைப் பெருமைப்படுத்தியதைக் கூறலாம். இந்நூல், இக்காலச்சிறுவர், சிறுமியருக்கு உதவும் வகையில் வெளிவந்துள்ளது. இந்நூலில் 67 கதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியையோ அல்லது சிறந்த பண்பினையோ தெரிவிக்கும் வகையில் உள்ளன. எடுத்துக்காட்டாக ஜாதி மாம்பழம் எனும் கதை, மனிதனிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் குணம் வேண்டும் என்றும் (பக். 9), ஒன்றே செய்க, நன்றே செய்க என்று ஒரு கதையும்(பக். 51), அரசி சிரித்தாள் என்ற கதை, குழந்தைச் செல்வத்தின் அருமையையும் (பக். 156) நமக்குத் தெரிவிக்கின்றன. நூலாசிரியர் வாண்டு மாமாவின் பணி பாராட்டத்தக்கது. -கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 31/8/2014.