உடையும் இந்தியா
உடையும் இந்தியா, ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன், கிழக்கு பதிப்பகம், சென்னை. விலை ரூ. 425 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-310-9.html
மனித உரிமைகள், சமூக மேம்பாடு, தலைமைப்பண்புப் பயிற்சி, மனித உரிமைகள் மேம்பாட்டுப் பயிற்சிகள், கல்வி என்ற போர்வைகளில் வெளிநாடுகளிலிருந்து அந்நிய நிதி உதவிகள் அனுப்பப்பட்டு அவை இந்திய அடையாளத்தை வெறுக்கும் இளைஞர் சமுதாயத்தை உருவாக்க, இந்தியாவைப் பிளவுபடுத்த நடக்கும் முயற்சிகளை வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும் என்ற எண்ணத்தில், இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறதாம். இந்திய ஒருமைப்பாட்டின் அச்சுறுத்தலுக்கு அடிப்படையாக மூன்று ஆழமான காரணங்களாக பாகிஸ்தான் தூண்டும் இஸ்லாமிய மதவாதம், சீனா தூபமிடும் மாவோயிஸம், திராவிட, தலித் சமூகங்களை மற்ற இந்தியர்களிடமிருந்து தனித்துப் பிரிக்கும் மேற்கத்திய நாடுகள் என்று சுட்டிக்காட்டி அவற்றைப் பற்றிய ஆய்வு இந்தப் புத்தகம் என்று இதன் ஆசிரியர்கள் சொன்னாலும், புத்தகம் என்னவோ மூன்றாவதாகச் சொல்லப்பட்ட விஷயத்தை மட்டுமே நிறைய பேசுகிறது. ஆரிய – திராவிட இனங்கள் என்பதே ஒரு புரட்டு, ஆஃப்ரோ – தலித் என்பது அரசியல் ஆதாயங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம், இவற்றால் இந்தியர்கள் பிரிக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள் ஆசிரியர்கள் ராஜீவ் மல்ஹோத்ராவும், அரவிந்தன் நீலகண்டனும். 650 பக்கப் புத்தகத்தில் சரித்திரச் சம்பவங்களை ஆராய்ந்து சான்றுகளின் மூலம் ‘இந்தியா உடைந்துவிடும்’ என்ற கூற்றை உறுதி செய்திருக்கிறார்களா என்பது சந்தேகமே. இந்த நூலில் அண்ணா ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட், பெரியார் வன்முறையைத் தூண்டினார், அவர் யூதர்கள் கொல்லப்பட்டதை வரவேற்றார் போன்ற பல தவறான தகவல்களை ஆசிரியர்கள் பதிவு செய்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அதைவிட அதிர்ச்சியைத் தரும் விஷயம் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது அவர்களுக்குச் செய்யப்பட்ட அநீதி என்று சொல்லியிருப்பதுதான். காலனியாதிக்கம் இந்தியாவில் உருவாக்கிய பாகுபாடுகளை, சில பிரிவினர் இன்று சர்வதேச சக்திகளுடன் செயல்பட்டு இந்தியாவை உடைக்கிறார்கள் என்கிறது இந்தப் புத்தகம். ஆனால் சாதிய ஏற்றத் தழ்வுகளும் பாகுபாடுகளும் அநீதிகளும், முகமதியர்களும் கிருத்துவர்களும் இந்தியாவில் நுழைந்தபின்னரே அதிகமாகியது போன்ற அபத்தமான கருத்துகளையும், ‘திராவிட ஆன்மிகம்’, ‘திராவிட கிருஸ்தவம்’, ‘ஹிந்துமதத்தை திராவிட கிருஸ்துவத்துக்குள் செரித்தல்’ போன்ற குழப்பமான வார்த்தை ஜாலங்களுடன் கூடிய இம்மாதிரி புத்தகங்களால்தான் இந்தியா உடையுமோ என்று அச்சமாகியிருக்கிறது. – ரமணன் நன்றி: கல்கி 16-12-12