எங்கே அந்த சொர்க்கம்
எங்கே அந்த சொர்க்கம்?, வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 284, விலை 200ரூ.
நூலின் அட்டையிலேயே கடந்த ஐம்பதாண்டு கால தமிழக திராவிட இயக்க வரலாற்றை அலசி ஆராயும் நாவல் என்ற விளக்கத்துடன் வெளிவந்துள்ள இந்நூலை நாவல் என்று நூலாசிரியர் எவ்வாறு வகைப்படுத்தினார் என்பது புலப்படவில்லை. திராவிட இயக்கம் குறித்த கூர்மையான விமர்சனங்களின் தொகுப்பாகவே இந்நூல் காட்சி தருகிறது. இரு தலைமுறையினர் இடையிலான கடித உரையாடல் வடிவில் தனது அரசியல் பார்வையை நூலாசிரியர் முன்வைக்கிறார். திராவிட இயக்கத்தின் பரிணாமமான கட்சிகளின் லட்சணம், சுயநலனுக்கு அடிமையான தலைவர்கள், வீணாகிப்போன பொற்கனவுகள் ஆகியவை காட்டமாக மதிப்படப்படுகின்றன. சமூக சீர்திருத்த இயக்கமாக இருந்த திராவிட இயக்கம் எவ்வாறு அரசியல் இயக்கமாக ஆனது? தமிழகத்தில் சிறு குழுவினரால் தொடர்ந்து முன்வைக்கப்படும் தமிழ்த் தேசியம் எவ்வகையில் திராவிட இயக்கத்துடன் முரண்படுகிறது? திராவிட இயக்கத்தின் பலங்களும் பலவீனங்களும் எவை? போன்ற கேள்விகளுக்கு விவாத வடிவில் இரு தரப்புக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. நூலின் முடிவில், திராவிட இயக்கத்தின் தோல்வி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. சீர்திருத்தத் திருமணம், தமிழீழம், பகுத்தறிவு, ஒழியாத தீண்டாமை, ஜாதிக் கட்சிகளின் ஆதிக்கம், மதுவிலக்கு, தமிழ்வழிக் கல்வி, பெரியாரின் இரண்டாவது திருமணம், ஸ்பெக்டரம் ஊழல், வாரிசு அரசியல் எனப் பல விவகாரங்கள் விவாதத்தில் வந்துபோகின்றன. சமகால அரசியலை நையாண்டி செய்யும் விமர்சனம் என்று இந்நூலைச் சொல்லலாம். நன்றி: தினமணி, 25/11/13.
—-
குலாலர் புராணம், கீதம் பப்ளிகேஷன்ஸ், 3/3, பத்மாவதி நிழற்சாலை, திருமலை நகர் இணைப்பு, பெருங்குடி, சென்னை 96, விலை 150ரூ.
மண் பாண்டங்கள் செய்வோர் குலாலர் என்று அழைக்கப்படுகிறார்கள். 1860ம் ஆண்டு வெளிவந்த குலாலர் புராணம் என்ற நூல், நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்புப செய்யப்பட்டுள்ளது. திருநீலகண்டர் இக்குலத்தில் தோன்றி சிவன் அருளைப் பெற்றவர். நன்றி: தினத்தந்தி, 20/11/13.