எண்ணங்களின் அதிசய சக்தி
எண்ணங்களின் அதிசய சக்தி , ஆரிசன் ஸ்வெட் மார்டன், தமிழில்: விமலநாத், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக்கம்: 314, ரூ. 160.
வாழ்வில் நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோம் என்பதற்கும் , எதிர்காலத்தில் உயரங்களை எட்ட இருக்கிறோமா அல்லது பாதாளத்தில் விழ இருக்கிறோமா என்பதையும் நமது எண்ணங்களே நிர்ணயிக்கின்றன என்பதைத் தெளிவாக விளக்கும் நூல் இது. நியாயமான கனவுகள் படைப்புச் சக்தி உடையவை, மனதில் ஏற்படும் ஒவ்வொரு ‘செல்’லும் லாபமடைகிறது அல்லது துன்பமடைகிறது. நம் யோசிப்பதும், நேசிப்பதுமே நம்மைக் கட்டமைக்கிறது என்பன போன்ற கருத்துகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. கனவு காணும் சக்தி என்பது நமக்கு விளையாட்டாகக் கொடுக்கப்படவில்லை. பல உண்மைகளைப் பொதிந்து வைத்துள்ள தெய்வீகப் பரிசு அது என்பது போன்ற ஆக்கப்பூர்வமான பல கருத்துகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
—
திருக்குறளில் தவமும் துறவும், இ. கி. இராமசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 1, பக். 172, ரூ. 125.
“தமிழர்க்குத் துறவறம் எனத் தனியே ஒரு வாழ்வு முறை இல்லை. இல்லறத்தில் வாழ்ந்து வளரும் நிலையே துறவும் தவமும் ஆகும்” அதாவது, ‘இல்லறத்தின் படிநிலை வளர்ச்சியே திருக்குறள் கூறும் துறவறம்’ என்கிறார் தமிழறிஞர் தமிழண்ணல். ’அடங்கு நெறியும் ஒடுங்கு நெறியும்தான் தவம்’ என்று இரா. இளங்க்குமரணாரும், ‘இல்லறமும் துறவறமும் இருவேறு தளங்களில் இயங்குவன. துறவறம் இல்லறத்தின் வளச்சி நிலையன்று’ என்று இ.கி. இராமசாமியும், ’தன்னலம் துறந்த உலகத்தில் ஊறும் அருளே தவம்’ என்று ம. இலெ. தங்கப்பாவும், ‘தவ வாழ்வைவிட இல்வாழ்வே உயர்ந்தது என்ற குறட்கருத்து தொல்காப்பியமரபின் நீட்சி… திருக்குறள் கூறும் தவமும் துறவும் பற்றற்ற நிலையை அழுத்தம் திருத்தமாக வற்புறுத்துவனவே’ என முனைவர் ஆ. மணியும், ”தவமும் துறவும் ஒன்றா?” என்பதற்கான வினா எழுப்பி, அதற்கான விளக்கத்தைத் தந்துள்ள சாத்தூர் சேகரனும், ’துறவறத்தின் வாயில் இல்லறமே’ என்னும் முடிவை முன்வைக்கும் மு.சுப்பிரமணியனும், ‘வள்ளுவர் கூறும் தவத்தோடு தமிழ்த் துறவிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்’ முனைவர் வா.நேரும்வும், இவ்வாறு திருக்குறளில் ஈடுபாடு கொண்டவர்கள், தமிழார்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பிறதுறை வல்லுநர்கள் என 20 பேர் நூலின் தலைப்பையொட்டி எழுதிய கருத்தரங்க ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல், திருக்குறள் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் புதுப்புது தகவல்களை வாரி வழங்கியுள்ளது. திருவள்ளுவர் மேல் உள்ள அபிமானத்தையும் மதிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. அடடா…! கட்டுரையாளர்கள் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் போன்றவற்றைப் பின்னணைப்பில் இணைத்துள்ள தொகுப்பாசிரியரை எப்படிப் பாராட்டுவது?
—
ஒன் மேன் ஆர்மி ஒரு போராளியின் சரித்திரம், டிராஃபிக் ராமசாமி, எழுத்தாக்கம் : எம். சதீஷ்குமார், விகடன் பிரசுரம், சென்னை – 2, பக், 152, ரூ.90. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-847-6.html
சமூகத்தில் உள்ள அநீதிகளை ஒரு தனிமனிதனாக நின்று தட்டிக் கேட்பது எல்லாராலும் இயலாத ஒன்று, ”இதுவரை 200 பொதுநல வழக்குகளை உயர்நீதிமன்றத்திலும், 20 பொது நல வழக்குகளை உச்சநீதி மன்றத்திலும், தமிழ்நாடு முழுவதும் 1000 புகார்களை வழக்குகளாகப் பதிவு செய்து வைத்திருக்கிறேன்” என்று கூறும் டிராஃபிக் ராமசாமி ஒரு வித்தியாசமான துணிச்சலான மனிதர். அவருடைய வாழ்க்கை வரலாறுதான் இந்த நூல். தனது 14 வயதில் ஒரு தாசில்தாருக்கு எதிராகப் போராட ஆரம்பித்த அவர், இன்றுவரை போராடிக்கொண்டே இருக்கிறார். சென்னையில் மீன்பாடி வண்டிகளுக்கு எதிராக வழக்குப் போட்டதால் கத்தியால் குத்துப்பட்டது, லஞ்சம் வாங்கும் காவல்துறையினருக்கு எதிராகச் செயல்பட்டதால் காவல்துறை அவர் மீது பொய் வழக்குப் போட்டது, அவரது ஆடைகளைக் களைந்து தெருவில் அடித்து இழுத்துச் சென்றது போன்ற நிகழ்வுகளைப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. பொது வாழ்க்கை என்றில்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் துணிவோடு செயல்பட்டிருக்கிறார் அவர். திருமணம் செய்து வைக்கச் சொல்லி வீட்டுக்கூறையிலிருந்து தலை கீழாகக் குதித்த நிகழ்ச்சி, வரதட்சணை வாங்க வேண்டும் என்று கூறிய தந்தையை எதிர்த்து, தனக்கு முடிவு செய்தது, அதற்காகக் குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேர்ந்தது என்று இந்நூலில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள், அநியாயங்களை எதிர்க்கும் ஒரு தனிமனிதனின் மீதான மரியாதையை அதிகப்படுத்துகின்றன. அனைவரும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி (1.4.2013).