மீண்டும் என் தொட்டிலுக்கு
மீண்டும் என் தொட்டிலுக்கு, பாவலர் சொல்லினியன், நந்தினி பதிப்பகம், 117, புறவழிச்சாலை, திருவண்ணாமலை 606601, பக்கங்கள்116, விலை 60ரூ.
குழந்தைகள் உலகமே தனிதான். அங்கே கோபதாபங்கள் இருப்பதில்லை. சாதி பேதங்கள் இருக்காது. அடிதடிகளும் ஏமாற்றும் இல்லை. அரசியல் இருக்கவே இருக்காது. ஆன்மிகம் இல்லை. தோல்விகள் இல்லை. எல்லோரும் சரிநிகர் சமமானவர்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் உலகத்தை எட்டிப் பார்க்க வைக்கும் ஒரு சாளரம்தான் இந்நூல். குழந்தைகளைக் கொஞ்ச நேரமில்லாத மனிதர்கள்கூட இந்த மழலைக் கவிஞரின் கவிதை உலகிற்குள் போனால் குழந்தைகள் உலகத்தை ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள். இது பெரியவர்களுக்கான குழந்தைக் கவிதைகள்.
—-
மாவீரன் தீரன் சின்னமலை, கவிஞர் உடுமலை பி.எஸ்.கே. செல்வராஜ், இல.செ.க.வின் தன்னம்பிக்கை வெளியீடு, 10, சாஸ்திரி வீதி, எண் 1, பி.என்.புதூர், கோவை 41, பக்கங்கள் 160, விலை 100ரூ
தாய்நாட்டிற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்தவன் தீரன் சின்னமலை. சுதந்திரத்திற்காக போரிட்ட கொங்கு மண்ணின் மைந்தன். அந்த மாவீரனின் முழுமையான வீரவரலாற்றைச் சொல்லும் நூல் இது. அண்ட வந்த ஆங்கிலேயர்களை அடக்கி விரட்டியடித்தது, கொங்கு மண்ணில் நான்கு போர், மைசூர் மண்ணில் ஆறு ஆண்டுகள் போர்க்களத்தில் இருந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டது, கொங்கு மண்ணில் சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் இடையே சிற்றரசாக வாழ்ந்த சின்னமலையை வெல்ல முடியாத ஆங்கிலேயர் சூழ்ச்சியால் அவனைச் சிறைபிடித்த கொடுஞ்செயல் உள்ளிட்ட பல வீரதீர வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். வரலாற்று மாணவர்களுக்குப் பேருதவியாக விளங்கும் நூல். நன்றி: குமுதம், 16 ஜனவரி 2013