எதிர்ச்சொல்

எதிர்ச்சொல், பாரதி தம்பி, புலம், சென்னை 14, பக்கங்கள் 120, விலை 70ரூ.

“உண்மையான போராட்டம் என்பது தன்னிலிருந்தே தொடங்குகிறது. தன் சொந்த முரண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டு ஒரு இக்கட்டுக்கு வரும்போது மனம் போராட்டத்தை நிகழ்த்துகிறது. … சமூக அநீதிகளுக்கு எதிரான ஒரு போராளி இவ்விதம் தன்னிலிருந்துதான் உருவாக முடியும் … நமது சமூக அமைப்பில் போராடிக் கொண்டிருப்பது ஒன்றுதான் நேர்மையாக வாழ்வதற்கான வழி. அமைதியாக வாழ்வது என்றால் அனைத்தையும் சகித்துக் கொண்டு அடிமையாக வாழ்வது என்று அர்த்தம்.” மேற்கண்ட வார்த்தைகளுடன்தான் பாரதி தம்பி எழுதிய “எதிர்ச்சொல்” என்ற கட்டுரைத் தொகுப்பின் கடைசிக்கட்டுரை முடிகிறது. சுருக்கமாகச் சொன்னால் மேற்கூறிய கருத்தின் அடிப்படையில்தான் அனைத்துக் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன என்று கூறிவிடலாம். எதிர்ச்சொல் என்று சரியாகவே இப்புத்தகத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. நவீன உலகமய, தாராளமய சூழலில் நுகர்வுக் கலாச்சாரத்தில் அமிழ்த்தப்பட்டிருக்கும் மனிதர்களிடம் எதிர்ச்சொல்லாடுகின்றன கட்டுரைகள். “மெய்யுலகம் வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குபடுத்தப்படுகிறது” என்ற சவுக்கடியுடன் ஜெயலலிதா பற்றிய கட்டுரையுடன் புத்தகம் துவங்கி அன்னாஹசாரே, சாய்பாபா, ரஜினி என ஒவ்வொன்றாகத் தோலுரித்துச் செல்கின்றன கட்டுரைகள். “தனி நபர் போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியைத் தருவதற்கு நீண்ட காலத்தைக் கோரி நிற்கின்றன. இப்பொழுது நமக்குத் தேவை ஒருங்கிணைந்த மக்கள் போராட்டமே.” “உங்கள் ரசனை இயல்பானதில்லை அது திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.” என்று ஆங்காங்கே கருத்துக்கள் தெறித்து வாசகனை இழுத்துப் பிடிக்கின்றன. வழக்கமான கட்டுரைகளிலிருந்து விலகி எதிர்ச்சொல்லாடியிருக்கும் பாரதி தம்பியின் சொற்கள் படிக்கப்பட வேண்டியவை. –கி.ரமேஷ் நன்றி: புத்தகம் பேசுது, ஆகஸ்ட் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *