எத்திசையும் தமிழ்
எத்திசையும் தமிழ், திருக்குறள் பதிப்பகம், விலை 200ரூ.
இந்நூல் சேர நாடாக இருந்த கேரளத்தின் தமிழ்மொழி இலக்கிய வரலாற்றை விரிவாக ஆராய்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குட்பட்ட இலக்கிய வரலாற்றை முரசறைந்து தமிழுலகிற்கு அறிவிக்கின்றது. சங்க காலத்திலிருந்து விடுதலைக்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் படைப்புகளை வகுத்தும், தொகுத்தும் ஆய்வு செய்கின்றது. மலையாள நாட்டில் தாய்த்தமிழ் பொலிவோடு சிறப்புற்றிருப்பதைக் கண்டறிகின்றது. கேரளத்திற்கும், தமிழுக்கும் உள்ள உறவுகள் விளக்கப்படுகின்றன. கேரளத்தின் இன்றைய விழாக்களான திருவோணமும், திருவாதிரையும் தமிழரின் பழம்பெரும் விழாக்கள் என சுட்டப்படுகின்றது. கேரளத்தில் படைக்கப்பட்ட இலக்கண நூல்கள், அகத்தியம், காக்கைப்பாடினியம், தொல்காப்பியம், புறபொருள் வெண்பாமாலை, இலக்கண சூடாமணி போன்றவை சேர நாட்டின் கொடையாகும். கேரளத் தமிழிலும், மலையாள மொழியிலும் காணப்படும் சொற்கள் சில தொல்காப்பியத்தில் கண்டறியப்பட்டுத் தரப்பட்டுள்ளன. சேரநாட்டு புலவர்களின் சங்ககால, பிற்காலக் கவிதைகளை அட்டவணைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் முனைவர் சு. சரவணகுமார் முற்றிலும் புதிய கோணத்தில் ஆய்வை நிகழ்த்தியுள்ளார். பன்முகப் பார்வையோடு நுட்பமான பார்வையுடன் படைக்கப்பட்ட இந்நூல் ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.