எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வாலி எழுதிய பாடல்கள்
எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வாலி எழுதிய பாடல்கள், வாலி பதிப்பகம், 12/28, சவுந்தர்ராஜன் தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 150+150ரூ.
எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும், திரை உலகில் புகழின் உச்சியில் இருந்தபோது, இருவருக்கும் பாடல்கள் எழுதிய பெருமைக்கு உரியவர் வாலி. எம்.ஜி.ஆருக்கு அதிக பாடல்கள் எழுதியவர். எம்.ஜி.ஆரின் கொள்கை விளக்கப் பாடல்களில் பெரும்பாலானவற்றை எழுதியவர். நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்(எங்க வீட்டு பிள்ளை), மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (தெய்வத்தாய்), வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் (தேடி வந்த மாப்பிள்ளை), நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி (பெற்றால்தான் பிள்ளையா) அவற்றில் சில. திருக்கழுக்குன்றத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், இனிமேல் என் படங்களுக்கு வாலி என்ற கவிஞர்தான் பாடல் எழுதுவார் என்று பகிரங்கமாகவே எம்.ஜி.ஆர். அறிவித்தார் என்றால் வாலியின் பெருமைக்கு வேறென்ன சான்று வேண்டும்? இதேபோல், சிவாஜியின் பல வெற்றிப் படங்களுக்கு கருத்தாழம்மிக்கப் பாடல்களை எழுதியவர் வாலி. உயர்ந்த மனிதன் படத்தில், அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே பாடலுடன் இடையிடையே வசனத்தையும் சேர்த்து புதுமையாக எழுதி ரசிகர்களைக் கவர்ந்தாரே, அந்த பாடலை மறக்க முடியுமா? எம்.ஜி.ஆர். பாடல்களையும் சிவாஜி பாடல்களையும் தனித்தனியாக இரண்டு புத்தகங்களாக வாலி பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் ரூ. 150. நன்றி: தினத்தந்தி, 12/2/2014.
—-
விஸ்வபிரம புராணம், திருவையாறு அ. முத்துசாமி பாரதி, பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஆச்சார்யா ஃபௌண்டேஷன், பெங்களூரு, பக். 510, விலை 650ரூ.
விஸ்வ பிராமண குலத்தில் தோன்றிய காளஹஸ்தி முனிவர் சுவிரத மகாராஜனுக்கு தர்மஉபதேசம் செய்தபோது, உபதேசித்தே இந்த நூல். வடமொழியிலிருந்து தமிழில் இதனை மொழிபெயர்த்திருப்பவர் திருவையாறு புலவர் முத்துசாமி பாரதி. இந்நூலில் 45 அத்தியாயங்கள் உள்ளன. ஆசிரிய விருத்தத்தில் அமைந்த 1121 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. பாடலையொட்டியே விளக்க உரையும் தரப்பெற்றுள்ளது. தமிழில் ஆழ்ந்த புலமை இல்லாதவர்கள்கூட எளிதில் புரிந்து கொள்ளும்படியாகவே பாடலுக்கு விளக்க உரையும் அமைந்துள்ளது. பிரபஞ்ச தோற்றம், உயிர்களின் ஆயுள் எல்லை, ஐவகைத் தொழில்கள், நமது அன்றாடக் கடமைகள், குடும்ப வாழ்வு, உணவு முறை, வானப்பிரஸ்த நிலை, துறவற வாழ்வு போன்ற எல்லா விஷயங்களையும் பற்றி தெளிவாக விளக்குகிறது இந்நூல். மொழிபெயர்ப்பு என்று எண்ண முடியாதபடி சிறப்பாக அமைந்த பாடல்கள். முதல் பதிப்பு வெளிவந்து நூறுஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிற இரண்டாம் பதிப்பு இது. அந்தக் காலத்தில் இந்நூலுக்கு பூண்டி அரங்கநாத முதலியார், வை.மு.சடகோப ராமானுஜாச்சாரியார், யாழ்ப்பாணம் நல்லூர் பொன்னம்பலம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை போன்ற பல தமிழறிஞர்கள் சிறப்புப் பாயிரம் எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. வாழ்வாங்கு வாழ விரும்புவர்களுக்கு இந்நூல் ஒரு கையேடு. நன்றி: தினமணி, 27/1/2014.