ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்

ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், கோவை ஞானி, புதுப்புனல் வெளியீடு, பாத்திமா டவர் (முதல் மாடி), 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே எதிரில், சென்னை – 5. விலை ரூ. 50

  பார்வையற்ற கோவை ஞானி, தமிழ்த் தேசியத்துக்கு வெளிச்சம் பாய்ச்சுவதற்காக எழுதிய புத்தகம் இது. தமிழ்த் தேசியம் என்ற சொல், இன்று அரசியல் மற்றும் அறிவுச் சூழலில் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. ‘தமிழகத்தை தமிழன்தான் ஆளவேண்டும்’, ‘இங்கு வாழும் மற்ற மொழிக்காரர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே… பங்கேற்பாளர்கள் ஆகக்கூடாது’, ‘திராவிடன் என்று சொல்லிச் சொல்லித்தான் தமிழன் அதிகாரத்தை அடையாமல் போனான்’, ‘பெரியார் தமிழர் அல்ல…’ என்பது மாதிரியான பல்வேறு முழக்கங்கள் இப்போது ஒலிக்க ஆரம்பித்து இருக்கின்றன. சகட்டுமேனிக்கு வைக்கப்படும் இத்தகைய விமர்சனங்களாக இல்லாமல், ஆக்கபூர்வமாக தமிழ்த் தேசியத்தை எப்படிப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் குறிப்புகளாக கோவை ஞானி இதை எழுதி இருக்கிறார். கடந்த 40 ஆண்டு காலமாக இலக்கியம், அரசியல், சமூகம் குறித்த ஆழமான படிப்பு மற்றும் அனுபவப் பட்டறிவு காரணமாக அவரது திசைகள் தீர்க்கமாக உள்ளன. இந்தியா என்பது பல தேசங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டம். இதற்குள் வாழும் தேசிய இனங்கள் தங்களது நலன்களை அடைவதற்கான வழிமுறை என்ன என்பதில்தான் ஒவ்வொருவருக்கும் வேறுபாடு இருக்கிறது. அதை மாநில சுயாட்சி மூலமாக அடையலாம் என்கின்றன திராவிடக் கட்சிகள். தன்னுரிமை பெற்று இந்தியக் கூட்டாட்சிக்குள் இயங்கலாம் என்கின்றன தமிழ்த் தேசிய அமைப்புகள். இந்திய எல்லைக்குள் இருந்து விலகுவது மட்டுமே மாற்று வழி என்று தீவிரத் தமிழ்த் தேசியவாதிகள் சொல்கிறார்கள். இந்த மூன்று நிலைகளையும் நடைமுறை யதார்த்தங்களின் மூலமாக விசாரணை செய்கிறார் கோவை ஞானி. ‘ஒரு கூட்டாட்சி என்ற அமைப்பினுள் தன்னுரிமை பெறுவதற்காக நாம் போராட வேண்டும். தன்னுரிமை என்றவுடன் அது பிரிவினையாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இந்திய அரசியலமைப்பு ஒரு கூட்டமைப்பாக இருந்தாக வேண்டும் என்ற முறையில் நமக்குச் சிந்தனைத் தெளிவு தேவை. மாநில சுயாட்சி என்பது ஒரு மாயை’ என்கிறார் ஞானி. காஷ்மீர் பிரச்னை முதல் திபெத் விவகாரம் வரை அனைத்தையும் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை விளக்கும் அவர், இதற்கு மார்க்சியமும் பெரியாரியமும் மட்டும் போதாது என்றும் சொல்கிறார். ‘திராவிடம் என்பதும் தமிழ்த் தேசியம் என்பதும் எந்த வகையிலும் இணைந்து செல்ல முடியாது. தந்தை பெரியாரின் திராவிட இயக்கம் பெருமளவில் தமிழ்த் தேசியம் கொண்ட இயக்கம்தான்’ என்றும் இவர் ஏற்றுக்கொள்கிறார். ஈழத் தமிழர் போராட்டத்தின் எழுச்சியும் தொடர்ச்சியும் நமக்கு ஒர் அனுபவத்தைத் தர வேண்டும் என்று இவர் நினைக்கிறார். ‘இறுதி யுத்த நடவடிக்கைகள் காரணமாக, ஈழத் தமிழகம் இனியேனும் விழித்துக்கொள்ள வாய்ப்புகள் நேரலாம். இந்தியத் தமிழர்களாகிய நமக்கு இத்தகைய வாய்ப்புக்கு இன்னும் வழி திறக்கவில்லை. ஒரு போர்ச்சூழலுக்குள் நாம் இருந்தது இல்லை. நம் எதிரிகள் நம்மைச் சூழப் பத்திரமாக உள்ளனர். எதிரிகளை நமக்குள்ளும் வைத்துக்கொண்டு இருக்கிறோம். விடுதலை பற்றிய வெறி நமக்கு இல்லை. மிதப்பில் நாம் மூழ்கிக் கிடக்கிறோம். தமிழ்ப்பெருமை நம்மைத் தாங்காது. ஈழத்தமிழகம் நம்மை விழிப்புக்குத் தூண்டலாம்’ என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார். ‘தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியலை தமிழருக்கான அரசியல் என்று சொல்ல முடியாது. தமிழ்த் தேசியத்துக்கு எதிரான அரசியல்தான் இங்கு ஆதிக்கத்தில் இருக்கிறது’ என்று குற்றம் சாட்டுகிறார் கோவை ஞானி. தமிழ்நாட்டில் தமிழருக்கான அரசியல் நடக்க இந்தப் புத்தகம் துண்டுகிறது! – புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 21.11.12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *