சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி?
சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி?, லோகநாயகி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10. பக். 224, விலை ரூ. 130
குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி, சிநேகிதிகளின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல். கேள்விகளுக்கான பதில்கள்தான் என்றாலும், பதில்களில் உங்களுக்குக் கிடைக்கும் செய்திகள் ஏராளம். அறிவியல், ஆன்மிகம், குடும்ப உறவுகள், ஆண்-பெண் மன இயல்புகள், பயணம் குறித்த அனுபவங்கள், வரலாற்றுச் சான்றுகள், சினிமா உள்ளிட்ட நாட்டு நடப்புகள், அரசியல் விமர்சனங்கள் என்று தகவல் பெட்டகமாக விளங்குகிறது. பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை, சோதனைகளை சாதனைகளாக மாற்றும் வழிகள் என்று உங்கள் மனதைத் தொடக்கூடிய கருத்துகள் ஏராளம். நிகழ்வுகளையும் சம்பவங்களையும் கோர்த்துத் தருவது நூலின் சிறப்பு.
—
கேப்டன் லட்சுமி, கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 98. பக். 42, விலை ரூ. 20
நேதாஜி சிங்கப்பூர் தப்பிச் சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியபோது, அங்கே டாக்டராக இருந்த லட்சுமியும் அந்தப் படையில் இணைகிறார். அதன்பின் அவரது செயல்பாடுகள் பல நூல்களாக வெளிவந்துள்ளன. இந்நூல் கான்பூரில் அவர் வாழும் இல்லத்திற்கே சென்று நேரடியாக எடுக்கப்பட்ட நேர்காணலாகும். மகாத்மா காந்தியை முதன் முதலாக சந்தித்தது, கம்யூனிஸத்தில் ஈடுபாடு, நேதாஜியை முதன்முதலாக சந்தித்தது, குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை எதிர்த்துப் போட்டியிட்டது, கான்பூரில் தங்கக் காரணம் போன்ற பல கேள்விகளுக்கு அவரது பதில்கள் இன்றைக்கும் புதிய செய்திகளாக உள்ளன.
—
கல்லறையில் துடிக்கும் இசை, செ. சண்முகசுந்தரம், அம்ருதா பதிப்பகம், 12, 3வது பிரதான ரோடு, 2வது குறுக்குத் தெரு, கிழக்கு சி.ஐ.டி. நகர், சென்னை – 35. பக். 239, விலை ரூ. 180
பெரும்பாலும் சமூகத்தில், அரசியலில், பொதுவாழ்வில் நடக்கும் அநீதிக்கு எதிரான குரலாகவே சண்முக சுந்தரத்தின் ஒவ்வொரு கட்டுரையும் உள்ளது. மரபீனி மாற்றுப் பயிராகட்டும், தீண்டாமைக் கொடுமை, அணு உற்பத்தி, இலங்கைப் பிரச்னை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை இப்படி மனித உரிமைகள் மதிக்கப்படாமல் மீறப்படுவதை அறச்சீற்றத்துடன் அணுகும் போக்கு படிப்போரை கட்டிப்போடுகிறது. கம்யூனிஸ்டுகள், அதிகார வர்க்கம், தமிழ்த்தேசியவாதிகள், மாவோயிஸ்டுகள் என எதையும் வேறுபடுத்திப் பார்க்காமல் அந்த அறச்சீற்றம் பாய்கிறது. ‘அறம் மட்டுமே எஞ்சி இருக்கவேண்டும். அறமற்றவை இல்லாமல் போகவேண்டும்’ என்பதே நூலாசிரியரின் ஆசையாக உள்ளது. பொது நலனில் அக்கறை கொண்டவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல். – இரா. மணிகண்டன் நன்றி: குமுதம் 05-12-12