கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்

கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், அரும்பு பதிப்பகம் மற்றும் நிறைவகம், சென்னை.

கற்றல் குறைபாடு பிரச்னைக்கு தீர்வு இந்த நூல் சராசரி மாணவர்களில், ஐந்தில் ஒருவருக்குக் காணப்படும் கற்றல் குறைபாட்டைப் பற்றிய முழுமையான முதல் தமிழ் நூல். அறிவியல் பூர்வமான உண்மைகளை உளவியல் ரீதியாக, எளிய பேச்சத் தமிழில், சாமானிய மக்களையும் எளிதில் சென்றடையும்படி கதை சொல்வதுபோல் விளக்கி உள்ளது. அறிவுத்திறனிலும், விளையாட்டு போன்ற பல்கலைத் திறனிலும் சராசரியாகவோ அல்லது அதற்கும் மேம்பட்டு காணப்படும் பல பிள்ளைகள், கல்வியில் மட்டும் பின்தங்கிடும்போது, சோம்பேறி, ஊக்கமற்றோர் என, அவர்களை முத்திரை குத்தி மட்டம் தட்டுவதும், ஒதுக்கி வைப்பதும், சமுதாயத்தில் காணக்கூடிய ஒன்று. இந்த பிள்ளைகள், தம் வகுப்பு பாட புத்தகத்தை வாசிக்க, எழுத, கணக்குப் போட சிரமப்பட காரணமான டிஸ்லெக்சியா, டிஸ்கிராபியா, டிஸ்கால்குலியா ஆகியவற்றைப் பற்றி மிகத் தெளிவாக இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. மூளையின் செயல்பாடுகள் பற்றிய எளிமையான விளக்கம், கற்றல் குறைபாடுள்ளோரை எப்படி அடையாளம் காண்பது, கன்னென்ன பயிற்சிகள் கொடுக்க வேண்டும், நினைவாற்றலை வளர்க்கும் பயிற்சி முறைகள், யாரை அணுக வேண்டும், பெற்றோரும் ஆசிரியர்களும் இந்த பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும் என்பது போன்ற தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. எடிசன், ஐன்ஸ்டீன், வால்ட் டிஸ்னி, டாவின்சி, சர்ச்சில், பில்கேட்ஸ், டாம்க்ரூஸ், அபிஷேக் பச்சன் என, உலக அளவில் புகழ்பெற்ற பலரும் பள்ளிப் பருவத்தில், கற்றல் குறைபாட்டால் சிரமப்பட்டோரே என்ற தகவல், மதிப்பெண்கள் மட்டுமே வாழ்வின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை என்ற உண்மையை உணர்த்துவதாகவும், வகுப்பறையின் கடைசி இருக்கை மாணவர்களின் கைகளிலேயே நாட்டின் முன்னேற்றம் அடங்கியுள்ளது என்ற, மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமின் பொன்மொழிகளை மெய்ப்பிப்பதாகவும் உள்ளன. முப்பத்தி மூன்று அத்தியாயங்களிலும், வாசகரை ஈர்க்கும் விதத்தில் அருமையான தலைப்புகளும், மேற்கோள்களும், கவிதைகளும், படங்களும், சொல்ல விழையும் கருத்துக்களை எளிமைப்படுத்தி நூலிற்குப் பலம் கூட்டுகின்றன. ஆசிரியர்கள், இதுபோன்ற பிள்ளைகளுக்கு எப்படி கற்பிக்க வேண்டும் என்பது குறித்த கையேடாகவும் திகழ்கிறது. -ஆவுடையப்பன். நன்றி: தினமலர், 8/11/2015.

Leave a Reply

Your email address will not be published.